விஜயதசமி ஏன் கொண்டாட வேண்டும்?

63

விஜயதசமி ஏன் கொண்டாட வேண்டும்?

அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு – துர்க்கை (மகேஸ்வரி, கௌமாரி, வராகி)

அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு  – லட்சுமி (மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி)

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு – சரஸ்வதி (சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி).

மகிஷாசுரனை வென்ற மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் 10ம் நாள் திதி என்று பொருள்.  நாம் ஒரு சிறிய வெற்றியைப் பெற்றாலே மிகவும் சந்தோஷமாக அந்த வெற்றியைக் கொண்டாடுகிறோம். ஆனால் மகிஷனை அழித்து விண்ணுலகையும், மண்ணுலகையும் காத்து அருளிய மகிஷாசுரமர்த்தினியின் வெற்றியை கொண்டாடுவது அவசியமாகும்

இராவணனை வதைத்த ஸ்ரீராம்

இந்த தினத்தில் தான் இராவணனை ராமபிரான் வதைத்ததாகக் கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி அன்று தொட்ட காரியம் துலங்கும்:

விஜயதசமி அன்று  நாம் எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜோதிடத்தில் சந்திராஷ்டமம் என குறிப்பிடுவார்கள். எந்த ராசிக்கு சந்திரன் 8ம் இடத்தில் அமர்கிறாரோ அன்று அவருக்கு சந்திராஷ்டமம். அன்றைய தினம் அவருக்கு உகந்த நாளாக இருக்காது என்பார்கள்.

ஆனால் இந்த விஜயதசமி தினத்தில் அப்படி இல்லை. அன்னையின் வெற்றியை கொண்டாடக்கூடிய இந்த சுப தினத்தில், யாருக்கும் அசுப தினம் என்று இல்லை.  யாராக இருந்தாலும் புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், மாணவர்கள் கல்வியில் புதிய பாடத்தை தொடங்குதல் என எதைத் தொட்டாலும் அது பல மடங்கு வெற்றியைத் தரும் என்பது பலரும் உணர்ந்து உண்மை.

வித்யாரம்பம்:

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.  சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது  படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும்.

இந்தியாவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில மட்டுமே உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு பாடல் பாடப் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கினர். சிறு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பச்சரிசியில் அகரம் எழுதி பழக்கினர்.

ஓம் என்று எழுதுவது ஏன்?

ஒரு குழந்தை ஓம் என்கிற சொல்லை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக விஜயதசமி கருதப்படுகின்றது. ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருகுலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால், தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.