விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?

270

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?

தோப்புக்கரணம் போடுவதற்கு புராண ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் என்று இரு கருத்துக்கள் இருக்கின்றது. அதாவது, அறிவியல் பூர்வமாக பார்த்தோமானால், தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில் குட்டிக் கொள்வதாலும் மன எழுச்சியும், உடல் சுறுசுறுப்பும் உண்டாகிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று செப்டம்பர் 10-09-2021, ஆவணி 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்றைய பதிவில் தோப்புக்கரணம் போடுவது பற்றியும், நெற்றியில் குட்டிக் கொள்வது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். விநாயகரை தரிசிக்க சென்று இடது கையால் வலது பக்க நெற்றிப் பொட்டிலும், வலது கையால் இடது கை நெற்றிப் பொட்டிலும் 3 முறை குட்டிக் கொள்வோம்.

இதே போன்று இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும், பிடித்து உட்கார்ந்து எழுந்து தோப்புக் கரணம் போட்டு வேண்டிக் கொள்வோம். இப்படி உட்கார்ந்து எழுந்திருக்கும் போது நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் மூளைக்கு செல்வதாக அறிவியல் காரணம் ஒன்று கூறப்படுகிறது.

புராணக் கதை:

அகத்திய முனிவர் கொண்டு வந்த கமண்டலத்தை காகம் உருவில் வந்த விநாயகப் பெருமான் தட்டி விட்டார். இதனால், கமண்டலத்தில் இருந்த நீரானது, கீழே கொட்டி நதியாக உருவெடுத்தது. கமண்டலத்தை கவிழ்த்து விட்ட பிறகு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்திய முனிவரின் முன்பு வந்து நின்றார். கமண்டல நீரானது கீழே கொட்டியதால் கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அந்தணச் சிறுவனாக இருந்த விநாயகர் தனது சுயரூபத்தை காட்டவே, காவிரி நதியை உருவாக்கி உலக மக்களின் நன்மைக்காக அவ்வாறு செய்ததாக கூறினார்.

தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம்:

விநாயகர் தலையில் குட்டியதால், தனது தவறை உணர்ந்த அகத்தியர், தவறுக்காக வருந்தி தனது தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.

தோப்புக்கரணம்:

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தொடர்ந்து அவர்களை கஷ்டப்படுத்தி வந்ததோடு தோப்புக்கரணமும் போட வைத்தான். விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். பயந்து பயந்து போட்ட தோப்புக்கரணத்தை பக்தியுடன் விநாயகப் பெருமானுக்கு தேவர்கள் போட்டனர். அன்று முதல் விநாயாகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது.

சிதறு தேங்காய்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு விக்னேஸ்வரருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும். சிதறு காய் உடைப்பதற்கும் புராணக் கதை உள்ளது. மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் எடுத்து விநாயகப் பெருமான் காசிப முனிவரது ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.

அப்போது, யாகம் ஒன்றிற்கு புறப்பட்ட போது அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மீது இருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி எறிந்து அவனை விநாயகர் தூள் தூளாக்கினார். எந்தவொரு காரியத்திற்கு சென்றாலும் தடைகள் ஏற்பட்டால் அதனை உடைக்க விநாயகரை வழிபட்டு செல்வது வழக்கம்.

விக்னேஸ்வரர்:

தனக்கு தடை ஏற்பட்ட போது அதனை தேங்காயை தூக்கி எறிந்து தூள் தூளாக்கியதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். அதோடு, சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.