விநாயகர் சதுர்த்தி விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

107

விநாயகர் சதுர்த்தி விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

முழு முதல் கடவுள் விநாயகர். மிகவும் எளிமையானவர். அருகம்புல் கொண்டு வழிபட்டு வரவே வேண்டிய வரம் அருளுபவர். வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே பக்தர்களுக்கு காட்சி தருபவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகரை எப்படி வேண்டுமென்றாலும் வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் எப்படி வழிபட வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். சதுர்த்திக்கு முந்தைய நாள் வீடு, பூஜை அறை என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் உள்ள சாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு சதுர்த்தி நாளன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டிலிருக்கும் அனைவரும் குளித்து முடித்து சுத்தமான உடையை உடுத்திக் கொள்ள வேண்டும். வீட்டு தலைவாசலில் மாக்கோலம் போட வேண்டும். முடிந்தால் மாவிலை தோரணம் கட்டுவது சிறப்பு. விநாயகப் பெருமானுக்கு இஷ்ட விருட்சமாக இருப்பது அரசமரம். மாவிலை தோரணத்தோடு அரச இலையையும் சேர்த்து தோரணம் கட்டுவது கூடுதல் சிறப்பு ஆகும்.

அதன் பிறகு பூஜையறையில் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஆகியவற்றிற்கு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு எல்லாவற்றையும் தயாராக வைக்க வேண்டும். விநாயகப் பெருமானை வைக்கும் பலகைக்கு மஞ்சள் தடவி, கோலமிட வேண்டும். அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசி பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

சதுர்த்திக்கு முதல் நாளோ அல்லது சதுர்த்தி நாளன்றோ விநாயகர் சிலையை வாங்கி வைத்து கொள்ளலாம். வாங்கி வரும் போது வெறும் கையில் கொண்டு வரக் கூடாது. தட்டு அல்லது பலகை மீது வைத்து தான் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன், வாசலில் வைத்து தீபம் காட்டி வழிபட்டு பின்னர் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

பின்னர் அவருக்கு பிள்ளையார் துண்டு, பூணூல் சாற்றிட வேண்டும். பூணூல் 3 நூல் கொண்டதாக இருக்க வேண்டும். வெள்ளை நூலில் சந்தனம் தடவி பிள்ளையாருக்கு பொருந்தும்படி இட்து பக்கமாக தோளில் பூணூலை சாற்றி வலது பக்கம் இடுப்பில் 3 முடிச்சுகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் விநாயகருக்கு அருகம் புல், எருக்கம் மாலை போட்டு, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், பச்சரிசி, சுண்டல், பால் பாயசம், அவுல் என்று நிவேதனமாக படைக்க வேண்டும். விநாயகருக்குரிய மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபட வேண்டும். செண்பக மலர்கள் கிடைத்தால் அர்ச்சனை செய்யுங்கள். பின் தூப, தீபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுத்து முடித்த பின் தண்ணீரால் கற்பூரத்தை சுற்றி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மும்முறை ஊற்ற வேண்டும்.

விநாயகருக்கு 3 முறை தோப்புக்கரணம் போட்டு தலையில் 3 முறையும் குட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் என்ன தவறுகள் செய்திருந்தாலும் விநாயகர் நம்மை மன்னித்து அருள் புரிவார். விநாயகர் சதுர்த்தி நாள் முதல் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் வரை அவரை வீட்டிலேயே வைத்து நைவேத்தியங்கள் படைத்து வழிபட வேண்டும்.

மூன்றாம் நாள் அல்லது 5 ஆம் நாள் நீர் நிலைகளில் கிணறு தோட்டம் போன்ற பகுதிகளில் அவரை கரைத்துவிடலாம்.