வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி வரவேற்க வேண்டும் தெரியுமா?

114

வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி வரவேற்க வேண்டும் தெரியுமா?

எதிரியாக இருந்தாலும் கூட, வீடு தேடி வந்தவரை என்று அழைத்து வரவேற்பது தான் தமிழரின் பாரம்பரியம். தமிழர்களின் தலையாய பண்புகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்தினரை கடவுளுக்கு ஒப்பாக பார்ப்பது உண்டு. வீட்டிற்கு வருபவர்களை சரி வர வரவேற்பது நம் தலையாய கடமை ஆகும். வீட்டு வாசலுக்கு வந்தது முதல் அவர்கள் புறப்பட்டு செல்லும் வரை அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.

வீட்டில் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு வணக்கம் கூறி வரவேற்தல் வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கையில் கனமாக பை ஏதேனும் வைத்திருந்தால் உடனே சென்று அதனை வாங்கிவிட வேண்டும். அவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் உடனே செய்து தர வேண்டும். அவர்கள் வந்தவுடன் அவர்களை ஸ்பெஷலாக உணர வைக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்தவர்கள், அவர்களது உறவினர்கள் என அனைவரையும் நல்லபடியாக விசாரித்தல் வேண்டும். அதோடு, நம் வீட்டு பிள்ளைகளையும் விருந்தினரிடம் நலம் விசாரிக்க கூறுதல் வேண்டும்.

முதலில் வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். நம் வீட்டிற்கு வருபவர்கள் சிலர் ஏதேனும் கோபமாகவோ அல்லது தீங்கோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதன் மூலமாக அவர்களின் மனசு ஆசுவாசம் அடையும். மேலும், வெகு தூரத்திலிருந்து வருபவர்கள் முதலில் தண்ணீர் குடிக்கவே விரும்புவார்கள். இதன் மூலமாக அவர்களது களைப்பு தீரும்.

வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கவனச்சிதறல் ஏற்படும். வீட்டில் உள்ள அனைவரையும் வரவழைத்து விருந்தினரை உபசரிக்க செய்தல் வேண்டும். அதன் பிறகு டீ, காபி, சாப்பிடுவதற்கு பிஸ்கட், ஸ்நாக்ஸ் என்று கொடுக்க வேண்டும்.

களைப்புடன் வந்தவர்களுக்கு முகம் துடைப்பதற்கு டவல் கொடுக்க வேண்டும். பெண்களாக இருந்தால், ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணுறீங்களா என்று கேட்க வேண்டும். ஏனென்றால், சிலர் கேட்பதற்கு தயங்குவது உண்டு.

சிறு குழந்தைகள் வந்திருந்தால், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அறிந்து கொண்டு அவர்கள் விரும்பியதை கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் பால் குடிப்பதை விரும்புவார்கள். வந்தவர்களை சாப்பிட சொல்ல வேண்டும். ஆனால், அதிக முறை அவர்களை வற்புறுத்தக் கூடாது. நம் வீட்டில் உள்ள பிரச்சனைகளை தேவையில்லாமல் அவர்களிடம் பேசக் கூடாது.

அவர்களது பிரச்சனையை அவர்களாகவே பேசத் தொடங்குவதற்கு முன்பாக நீங்கள் கேட்க தொடங்க கூடாது. வந்தவர்களுக்கு அறிவுரையும் வழங்க கூடாது. வந்தவர்கள் உடனே கிளம்புவதாக இருந்தால் அவர்களுக்காக அன்றைய நாளை செலவிடுங்கள். ஏனென்றால், அவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பதில்லை.

அவர்கள் முன்பாக நம் வீட்டு உறவுகளை குறைத்து பேசக் கூடாது. சாதம், சாம்பார், ரசம், பொரியல், வடை, பாயாசம், அப்பளம், மோர், இனிப்பு என்று ஸ்பெஷலாக கவனித்து அனுப்புங்கள். இடையிடையில் வேறு என்ன சாப்பிடுறீங்க, சாம்பார் வேணுமா, ரசம் வேணுமா பொரியலா என்று கேட்டுக் கொண்டே இருங்கள்.

அவர்கள் தூங்க பெட் ரூமை தயார் செய்து வைக்க வேண்டும். தூங்கி எழுந்ததும் அவர்கள் கிளம்புவதற்கு முன்பு டீ, காபி என்று கொடுக்க வேண்டும். மேலும், நம் வீட்டுப் பெண்கள், அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு குங்குமம் தர வேண்டும். பிறந்த பெண் வீட்டிற்கு வந்து செல்லும் போது புது துணி கொடுப்பது சிறந்தது.

நம் வீட்டு சிறு குழந்தைகளை உறவினர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். அவர்களிடம், அவர்களது வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாக சொல்ல சொல்ல வேண்டும். அவர்கள் தெரு திரும்பும் வரையில் அங்கேயே நின்று வழி அனுப்ப வேண்டும். இவ்வாறு உபசரிக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.