வீட்டில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

110

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

நவராத்திரி காலத்தில் வரும் மகா நவமித் திருநாள் மகா சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 14 மற்றும் 15ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் குறிக்கிறது. கலைகளுக்கு அரசி, கலைமகள், கலைவாணி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலங்கள் மூலம் அலங்கரிக்க வேண்டும்.

எளிய வகையில் மேடை ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். கல்விக்கு அதிபதி சரஸ்வதிக்கு பாடப் புத்தகங்கள் மூலம் மேடை அமைக்கலாம். அதிலும் 3 அல்லது 5 அடுக்குகள் வரையில் தான் மேடை இருக்க வேண்டும். புத்தகங்களுக்கு மேலாக பட்டு துணி விரித்துக் கொள்ளலாம். மேடைக்கு நடுப்பகுதியில் சரஸ்வதி தேவியின் படத்தை வைக்க வேண்டும். மேடையை சுற்றிலும் தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சரஸ்வதி தேவி பட த்துக்கு சந்தனம், குங்கம்ம், மாலை, மலர் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். அருகில், பூஜைக்குரிய கலசம், வாசனை திரவியங்கள், மாவிலை தேங்காய் வைத்து வணங்கி பூஜையை தொடங்க வேண்டும். மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, விளாம்பழம், இளநீர், மாதுளை என்று பழங்கள், பழரசம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

பூஜையை தொடங்கிய பிறகு முதலில் முழு முதல் கடவுளான கணபதியை தொழுது சரஸ்வதி பூஜையை தடங்கலின்றி செய்ய வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்குரிய பாடல்களை பாடி, வணங்க வேண்டும்.

பூஜை முடிந்த பிறகு குழந்தைகள், ஏழைகள் என்று பலருக்கும் பிரசாதங்கள் கொடுக்க வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று தேவியை வழிபட்ட பிறகு மறுநாள் விஜயதசமி நாளில் உரிய நேரம் பார்த்து சரஸ்வதி தேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியமாக கொடுத்து சரஸ்வதியை விசர்ஜனம் செய்ய வேண்டும்.