வைகுண்ட ஏகாதசி அர்த்தம் என்ன தெரியுமா?

197

வைகுண்ட ஏகாதசி அர்த்தம் என்ன தெரியுமா?

அரங்கத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயா, அரங்கனிடம் என்ன கேட்டார்? “பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தாயே” என்று கேட்டார்! அதற்குப் பதில் ஆயர்ப்பாடியில் தான் உள்ளது. கண்ணனின் ஊரான ஆயர்ப்பாடிக்குப் போகலாம் வாருங்கள். ஆயர்ப்பாடிக்குப் போகணும்னா “விசா” வேண்டுமே! என்ன விசா? கோபியர்களைப் போல் குழந்தை மனம் வேண்டும். அது தான் அந்த விசா!

கோபிகை இதைப் பார்த்து விட்டாள்! அடே கண்ணா என்று துரத்திக் கொண்டே ஓடுகிறாள்! பின்னால் யசோதையும் வந்து விட்டாள்!

குழந்தை ஓடியே போய் ததிபாண்டன் என்றவன் வீட்டுக்குள் ஒளிகிறது!

ததிபாண்டன் இடையரில் கடையன்! தயிர்க் கடையன்.

படிப்பறிவு எல்லாம் கிடையாது! மிகவும் எளியன்! ஆனால் அன்பே உருவானவன்; அடிக்கக் கூட மாட்டான், மாட்டை!

அவன் வீட்டிலோ எல்லாக் குடங்களிலும் தயிர் நிரம்பி வழிகிறது!

ஓரமாய் ஒரு காலிப் பானை தென்பட, குழந்தை அதற்குள் குதித்து ஒளிந்து கொள்கிறது! இதைத் ததிபாண்டன் பார்த்து விட்டான்!

பானை மேல் ஒரு மூங்கில் தட்டு போட்டு மூடி, அதன் மேல் சாய்ந்து கொண்டான்.

யசோதை: ததிபாண்டா, அந்தத் திருட்டுக் கண்ணன் இங்கே ஓடி வந்தானே! பாத்தியா? அவன் இன்று என்னிடம் அடி வாங்காமல் தப்பவே முடியாது, பார்க்கலாம்!

பாண்டன்: யசோதாம்மா, கண்ணனை நான் பாத்தே மாசக் கணக்குல ஆகுதே! இங்கு வர மாட்டேனே! என்னிடம் ஏற்கனவே ஒரு முறை பிடிபட்டான்; அதிலிருந்தே எனக்கும் அவனுக்கும் ஆகாது! – கூசாமல் பொய் சொன்னான்!

எல்லாரும் போய் விட்டார்கள்; ஆனால் பாண்டன் எழுந்திருக்கவே இல்லை!

அடே பாண்டா, விலகு! எனக்கு மூச்சு முட்டுது என்று குழந்தை பானையில் இருந்து குத்துகிறது!

கண்ணா, உனக்குப் பானையில் இருந்து விடுதலை வேணும்னா, எனக்கும் நீ விடுதலை கொடுக்க வேணும்! மோட்சம் என்ற விடுதலை கொடுக்க வேணும்!

என்னது மோட்சமா? மோட்சம் என்றால் உனக்கு என்னன்னு தெரியுமா?

எல்லாம் தெரியும்! கோவிலில் அந்த நாமக்காரப் பூசாரி சொல்வாரே! சாமி கூடவே இருக்கலாம் என்று! அது தானே எனக்கும் வேணும்!

சும்மா கேள்வி எல்லாம் கேட்காதே கண்ணா! பிறவி என்கிற பானையிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்; உன்னால் கொடுக்க முடியுமா? முடியாதா??

ததி பாண்டா, சற்று முன்னர் கூசாது பொய் சொன்ன உனக்கா மோட்சம்?

உனக்கு மட்டும் என்ன? இந்தப் பானைக்கும் சேர்த்தே கொடுப்பேன் மோட்சம்!

கண்ணன் பானைக்குள் இருந்து எழுகிறான்!

அவன் வாக்கை மெய்யாக்க, வைகுந்த விமானம் வருகிறது; பாண்டனையும், பானையும் சேர்த்தே ஏற்றிக் கொள்கிறது! ஆச்சாரியர்கள் தங்கள் வியாக்யானத்தில், “வைகுந்தம் சென்றால், இப்போதும் அந்தப் பானையைக் காணலாம்”, என்று சுவைபட உரைப்பார்கள்!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்!