அனுமனும் தமிழும்

258

அனுமன் பெரு முயற்சிக்குப் பிறகு சீதா பிராட்டியைக் காண நெருங்கும் பொழுது அங்கே ராவணன் வருகிறான். உடனே அனுமன் மறைந்து கொள்கிறான்.ராவணன் கொடிய சொற்களைப் பேசிச் சென்ற பின்னர், சீதை உயிர் விடத்துணிந்தாள். அந்நிலையில் அனுமன், “அண்டர் நாயகன் அருள் தூதன் யான்” எனக் கூறியவாறு சீதை முன் தோன்றினான்.

சரி, இதுல என்ன விஷயம்ங்கறீங்களா? அனுமன் சீதையிடம் எந்த மொழியில் பேசியிருக்கக் கூடும்? நாம் சாதாரணமாக என்ன நினைப்போம்? வட மொழியில் பேசியிருப்பான் என்றுதானே!? ஆனால் ஆதி காவியமாகிய வால்மீகி ராமாயணத்திலேயே அனுமன் சீதையுடன் இனிமையான தமிழில் பேசினான் என்கிற பொருள் வருமாறு இருக்கிறது. தமிழ் வரலாறு என்கிற நூலில் மகாவித்வான் ரா.ராகவய்யங்கார் அவர்கள் இக்கருத்தைக் கூறுகிறார்.

“முதலில் சீதையுடன் என்ன மொழியில் பேசுவது என்று அனுமன் ஆராய்ந்தான். சமஸ்க்ருதத்தில் பேசலாம். ஆனால் அப்பொழுதுதான் ராவணன் வந்து சமஸ்க்ருதத்தில் பேசி விட்டு சென்றிருக்கிறான். மீண்டும் தாமும் அதே மொழியில் பேசினால் இவன் ராவணனின் கையாள் என்றே சீதை கொள்ளக் கூடும். எனவே தூதுக்குரிய எல்லா பொருள்களையும் மதுரமான மொழியிலேயே பேசுவது என்று அனுமன் துணிந்தான் (சுந்தர காண்டம், சருக்கம் 30; பாடல் 43.) அதாவது சமஸ்க்ருதத்தில் பேசினால் ராவணனே வேறு உருவம் எடுத்துக் கொண்டு தன்னிடம் மீண்டும் வாலாட்ட வருகிறான் என்று சீதை எண்ணிவிடலாம். எனவே மக்கள் மொழியாகிய மதுரமான மொழியிலேயே பேசுவது என்று அனுமன் முடிவு செய்து கொண்டான் என்று வால்மீகி கூறுகிறார் (வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், சருக்கம் 30, பாடல்கள் 18, 19).

இதுல இருந்து என்ன தெரிகிறது? விந்திய மலைக்குத் தெற்கே இருந்த அனுமன் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் என்பதும், சீதையும் அவ்விரு மொழிகளும் தெரிந்தவள் என்பதும் தெளிவாகிறது.