அன்னியோன்ய தம்பதி என்றால்…?

165

சீதையையும் ராமரையும்தான் முதல் உதாரணமாகச் சொல்லுவார்கள்.

கோதாவரி தீரத்திலே ராமனும் சீதையும் இருக்கும் நேரம். இருவரும் மௌனமாய் இருக்கிறார்கள். திடீரென்று ராமன் சிரித்தான். அவன் ஏன் சிரித்தான் என்று சீதபிராட்டிக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் கேட்கத் தயக்கம். மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். சற்று தூரம் நடந்து போனதும் சீதை சிரித்தாள்.

அதைப் பார்த்துவிட்டு ராமன் கேட்டான். “சீதா! எதற்குச் சிரிக்கிறாய் நீ”? அவர் இப்படிக் கேட்டதும் சீதைக்குத் தைரியம் வந்ததாம்.
“நீங்கள் எதற்குச் சிரித்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்” என்றாள்.

“நீதான் முதலில் சொல்ல வேண்டும்”. “அதோ அப்படிப் பாருங்கள்”. சீதை சுட்டிய திசையில் ஒரு யானைக் கூட்டம். அந்த யானைகள் எல்லாம் ராமனின் கம்பீரமான நடையைப் பார்த்து விட்டு, தங்களின் நடையை எண்ணி வெட்கம் கொண்டனவாம். “அதைக் கண்டுதான் சிரித்தேன்” என்றாள் சீதை.

உடனே ராமன் சொன்னான், “நானும் அதே காரணத்துக்காகத்தான் சிரித்தேன். சற்றுமுன் நாம் நடந்து வந்த பாதையில் அன்னப் பறவைகளின் கூட்டம் ஒன்று வெட்கித் தலைகுனிவதைக் கண்டேன். தாங்கள் நடை அழகிலே உன்னிடம் தோற்றுவிட்டதை எண்ணித்தான் அந்த அன்னப் பறவைகள் வெட்கமுற்றன என்பது தெரிந்தது. அதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது”.

அவனும் சிரித்தான். அவளும் சிரித்தாள்! இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது! ஆனால் இருவருமே நடையைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.

இவர்கள் கருத்தொருமித்த தம்பதி என்றாகிறதல்லவா!
இப்படிக் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தும் தம்பதிக்கு பகவான் அருள் செய்கிறான்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !