பகவானுக்கு என்ன கொடுத்து வணங்க வேண்டும் ?

463

பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்.

அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.

ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, “அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்” என்றார்.

உடனே பரமாத்மா கேட்டானாம் – இவ்வளவு கேட்கிறீரே … நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? என்றார் பக்தர்.
என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா? பகவான் கேட்கிறார்.

அதைத் தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன்.
என்னது அது?
கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்..
என்றார் பக்தர்.

பகவான் பதிலே சொல்லலை. வாயை மூடிக் கொண்டு விட்டார். ஆகவே மனசை சமர்ப்பிக்கணும். தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.

பூரணனான அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான். இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்.

நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !