பகவத் ஸ்மரணை !

342

இப்போதும், எப்போதும் – இதுவரை செய்யாவிட்டாலும், இப்போதிருந்தாவாது நாம் செய்ய வேண்டியது – பகவத் ஸ்மரணையை, அழுத்தமாக, ஆழமாக ஏற்படுத்திக் கொள்வது தான். அப்படி வாழ்நாள் பூரா, வெளியில் எத்தனை காரியம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளூர ஓர் இழை பரமாத்மாவிடமே சித்தம் ஒட்டிக் கொண்டிருந்தால் தான் அந்திம காலத்தில் கன்னாபின்னா நினைப்புகள் வராமல் அவன் நினைவு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.

“ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:” – உயிரின் நெடும் ப்ரயாண சமயத்தில் கப வாத பித்தங்கள் கட்டி இழுக்கிறபோது உன்னை எப்படி நினைப்பேனோ? என்று குலசேகர ஆழ்வார் மாதிரி பெரியவர்களே பயப்படுகிறார்கள். பகவத் பாதாளும் இந்த “ப்ராண ப்ரயாண” பதப் பிரயோகம் பண்ணியிருக்கிறார் [லக்ஷ்மீ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்].

ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருசிம்ஹ மம தேஹி கராவலம்பம்

உயிர் கிளம்பும்போது ஏற்படுகிற பயத்தைப் போக்க, சகல பயங்களையும் நிவ்ருத்தி பண்ணும் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி தான் கைப்பிடியாக (கர அவலம்பம்) வந்து காக்க வேண்டும் என்கிறார். இதே மாதிரி சுப்ரமண்ய புஜங்கத்திலும், “ப்ராண ப்ரயாணோன் முகே மயி அனாதே” – அனாதையான நான் நெடும் பயணம் கிளம்பும் போது, அப்பா குஹனே! தயாளுவே! நீ முன்னே வந்து நிற்கவேண்டும்” என்கிறார். இப்படியே திருப்புகழில் அருணகிரி நாதரும் கூறுகிறார்.

பெரியாழ்வார் இன்னும் கொஞ்சம் ஸ்வாதீனமாக கூட பகவானிடம் சொல்கிறார்: “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்” என்று. சாகும் சமயத்தில் உன்னை நினைக்கமுடியுமா என தெரியவில்லை எனவே இப்போது முடியும்போது செய்யும் “ஸ்மரணை”யையே அப்போதைக்கு என்று “ரிசர்வ்” பண்ணினதாக வைத்துக்கொள் என்கிறார்!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !