கோபத்தை அடக்குவது எப்படி?

249

கோபம் அறிவை மறைத்து விடும். நாடியில் அதிர்ச்சியை உண்டாக்கி இதய பலவீனத்திற்கு வழி வகுக்கும். சிறு கோபம் கூட நமக்கு நெருங்கிய உறவினர், நண்பரை பிரிக்கும். எனவே தான் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்குக் கோபத்தை அடக்க வேண்டும். முடிந்த வரை, கோபப்படாமல் வாழ்தல் வேண்டும் என்கிறார்கள்…

கோபம் வரும் பொழுது இறைவர் மீது மனதைச் செலுத்துங்கள் என்கிறார் திருமுலர் நாயனார். கோபம் வரும் பொழுது “சிவ சிவ” என்று சொல்லலாம். இப்படியே பழகி விட்டால் நாளடைவில் கோபமில்லாமல் வாழ்ந்து விடலாம். இப்படி இரவும் பகலும் சிவசிந்தையுடன் (திருவருளுடன்) வாழ்பவரின் பந்த பாசங்கள் நீங்கி விடும். பரம்பொருளின் கருணை தானே வந்தெய்தும்.

“வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே”
– திருமந்திரம்

(செல்லும் அளவு = முடிந்த அளவு; வெகுளி = கோபம்; சிந்தை = மனம்; கல்லும் = பாசமும்; பிளந்து = நீங்கி; கடுவெளி = முத்திப்பேறு கிட்டும்)

கோபத்திற்குப் பிரிக்கும் ஆற்றல் உண்டு, சேர்த்து வைக்கும் ஆற்றல் இல்லை. கோபம் பல பாவச் செயல்கள் செய்வதற்குக் காரணமாய் அமையும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும் நாம். கோபம் வரும் பொழுது தண்ணீர் அருந்துங்கள், அந்த இடத்தைவிட்டே சற்றுத் தள்ளிச் செல்லுங்கள்.

இந்த பதிவை பற்றியும், தாங்கள் அறிந்த கோபத்தை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றியும் பின்னோட்டம் அளிக்கவும். வாசிப்பவர்க்கு உபயோகமாக அமையும்.