மகாவிஷ்ணு எப்படி சாளக்கிராமமாக மாறினார்?

195

ஒரு முறை சனீஸ்வரர், மஹா விஷ்ணுவைக் காணச் சென்றார். அவர் கண்ணில்பட விரும்பாத மகாவிஷ்ணு, மலை வடிவம் எடுத்து நின்றார். அதை அறிந்த சனி, மிகவும் கோபமுற்று, வஜ்ர கீடா என்னும் சக்தி வாய்ந்த புழுவாக மாறி அந்த மலையை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் குடைந்தார். இறுதியில் சனியின் மேல் மனம் இரங்கிய பகவான் சுயரூபத்தில் திவ்ய தரிசனம் அளித்தார். சனீஸ்வரரால் குடையப்பட்ட மலையையும், பல்வேறு படிவுகள், ரேகைகள் உள்ள கற்களையும் பார்த்தார், அவற்றிலிருந்து சில கற்கள் சிதறி ஓடின. அவற்றைப் பார்த்த மகா விஷ்ணு, நானும் இந்த மலையும் வேறு வேறல்ல… இனி நான் இந்தக் கற்களில் வாசம் செய்வேன். இக்கற்களின் வடிவில் என்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். அன்று முதல் சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. வஜ்ர கீடா என்ற புழு குடைந்ததனால் சாளக்கிராமங்களில் பல்வேறு படிவுகள் ரேகைகள், வடிவங்கள் தோன்றின.

இது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராமம் உற்பத்தியாகிறது. இது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.