*மர்கட பக்தி…*

369

பகலிலும் சூரிய ஒளி உள்ளே வராத அளவு ஓர் அடர்ந்த காடு அது. அதன் வழியே நான்கு வழிபோக்கர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவன் தீவட்டி ஏந்தியவன். அவன் பின் பூக்கூடையை ஏந்தியவன். அதற்கடுத்து ஒரு வண்ணான். கடைசியாக ஒரு சந்நியாசி.

இவர்கள் சென்று கொண்டிருக்கும்போது மரங்கள் விலகியவுடன் படிகளுடன் கூடிய குளம் ஒன்று தெரிந்தது. வெளிச்சம் வந்து குளத்தில் நீரைக் கண்டதும் தீவட்டி ஏந்தியவன் அதை நீரில் அணைத்து விடுகிறான். பூக்காரனோ, பூக்கள் வாடிவிடாமலிருக்க நீர் தெளித்து அவற்றைப் பார்த்துக் கொள்கிறான். வண்ணானோ, துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறான். சந்நியாசியோ, அதில் மூழ்கி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஜபமும் தியானமும் செய்கிறார்.

பரப்பிரம்மம் என்பதும் ஒரு குளம் போல் யாவருக்கும் பொதுவானது. பல சமயங்களும் தங்களுக்கேற்ற உருவங்களை விரும்பி வணங்கி வருகிறது. உருவமற்ற பரப்பிரம்மத்தை உருவம் கொடுத்து வணங்குவது மனித மனமே.

மனம் என்பது அடர்ந்த காடு. காம, குரோத, லோப, மத, மாச்சர்யம் என்னும் கெட்ட குணங்கள் உள்ளிருக்கும் ஆத்மாவைத் திரை போல் மறைத்துக் கொண்டிருக்கின்றன. குளம் என்பது பகவானின் கருணை, கருணை எல்லோருக்கும் பொதுவானதுதானே. படிகள் யாவும் சமயங்களையும் குறிக்கும் என்று கொள்ளலாம். ஆத்ம சாதகர்களாக வழிப் போக்கர்களை எடுத்துக்கொள்ளலாம்.

தீவட்டி ஏந்தியவன் அவனது பக்குவத்திற்குத் தகுந்தவாறு, அவன் தேவை முடிந்தவுடன் தீவட்டியை அணைத்துவிடுகிறான். பூக்காரனோ அவ்வப்போது பகவானை நினைத்துத் தன்னை தூய்மைபடுத்திக் கொள்கிறான். வண்ணானோ, துணிகளைத் துவைத்து அழுக்குகளைப் போக்குவது போல் தியானித்துத் தன்னை புதுப்பித்துக் கொள்கிறான். சந்நியாசியோ, பகவானிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து சரணாகதி மூலமாகத் தன் பிறவிச் சுழலை முடித்துக் கொள்கிறார்.

பகவானிடத்திலே தன்னை பூஜை, தியானம் மூலமாக முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். இதை சரணாகதி என வைணவம் கூறுகிறது.

மர்கட பக்தி ஒரு குரங்கானது தன் தாயின் வயிற்றைக் கட்டிக்கொண்டு மரத்திற்கு மரம் தாவி, எந்த பயமுமின்றி இருக்கிறது. அதுபோல இறைவனின் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தால் அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !