நாம் இப்பிறவியை கர்மத்தினாலே எடுத்துள்ளோம்

187

கர்மங்களை கழிக்க இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்றோ இன்னும் எத்தனை பிறவி எடுக்கவிடும் என்பதோ நமக்குத் தெரியாது!

நம் மீது கருணை கொண்ட எம்பெருமான் நமக்காக ஸ்ரீ ராமானுஜரை அனுப்பி சரணாகதி எனும் எளிய ஹிதத்தை காட்டிக்கொடுத்தார். பூர்வாசார்யர்களின் மூலம் பல கிரந்தங்களை சாதித்தருளினார். ஆழ்வார்களுக்கு மதிநலமருளி, இந்த சம்சாரத்திலும் இன்பம் பயக்கும் ஸத்வானுபவத்தினை சேதனர்களுக்கு அருளினார்.

நாம் இன்னும் எத்தனை காலம் பிறவி எடுக்கவேண்டும், இன்னும் எத்தனை பிறவி எடுக்கவேண்டும், என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. இவ்வுலகில் கிடைக்கும் இன்ப துனபங்களைப்பற்றியும் கவலையில்லை. ஏனெனில், தேக யாத்திரை வினைப்பயன். இதனால் நம்மால் இதில் ஏதும் செய்யமுடியாது.

ஒவ்வொரு பண்டிகைகளும் சாமான்யர்களுக்கு இவ்வுலகத்தில் வரும் தேக சுகத்திற்கு ஏதுவாக கொண்டாட்டத்திற்கு வழிவகுக்க, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டுகளில் வெகுஜன பத்திரிக்கைகளில் வரும் புத்தாண்டுப் பலன்களையும், தொலைக்காட்சிகளில் வரும் புத்தாண்டுப் பலன்களையும் படித்தும், பார்த்தும், கேட்டும், இந்த ஆண்டு நமக்கு என்ன கிடைக்கும் என்று தேடும் மற்றுமொரு க்ஷணமாகவே கழிகிறது.

உண்மையில் சுகம் எதுவெனில் எவ்வளவு க்ஷணங்கள் எம்பெருமானின் எண்ணற்ற பெருமைகளில் சில நீங்காமல் மனதில் இருக்கிறது என்பதே! அந்த சுகத்திலும் சுகம் அவன் திருவடிகளில் மனம் நிலைத்திருத்தல்! அவன் திவ்ய திருமேனி தரிசனமும், மனதில் தரிசிக்கவாகும் திவ்ய திருமேனியும், கல்யாண குணங்களை அனுபவிக்கும் க்ஷணங்களும், ஆழ்வார்களின் ஈர சொற்களையும் பூர்வர்களின் வ்யாக்கியானங்களையும் உள்வாங்கி உணர்ந்து அனுபவிக்கும் க்ஷ்ணங்களும் போதும் இவ்வுலகில்!

நாம் எம்பெருமானின் சொத்து என்பதையுணர்ந்தபின்பு, நமக்கென்று எது வேண்டும் என்பதை அவனல்லவா சங்கல்பிக்கவேண்டும்! அவன் மீது நமக்குள்ள பக்தியும் ஞானமும் கூட நிர்ஹேதுகக்ருபையால் அவனருளியதன்றோ? புத்தாண்டு என்பது, நாம் இந்த சம்சாரத்தில் கழிக்கவேண்டிய காலத்தில் இன்னும் ஒரு ஆண்டு கழிந்தது என்பதே!

சொத்து உடையவனை அடையவேண்டும் என்ற ஒரு உள்ளம் சொத்திற்கு இருப்பதில் தவறல்ல! இந்த புத்தாண்டில் அவன் மீது இன்னும் பக்தி வேண்டியும், அவன் குணானுபவத்தில் இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கவும், இதற்கு ஆசார்யர்களின் பரிபூரண கடாக்ஷம் கிடைக்கவும் பிரார்த்தனை!

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: