தெய்வத்தின் குரல்

188

அதாவது ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நட்க்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்!) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அநுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் – விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை – மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந்தோரும் * இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமௌலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கும்.

எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.

அடுத்த சந்ததிக்கு எப்படியாவது வேதத்தை ரக்ஷித்துக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆலோசனைதான் எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது.