திருவாரூர் தியாகராஜ மூர்த்தியின் வலது திருப்பாத தரிசனம்

41

சிவபரம்பொருளுக்கும் உமையன்னைக்கும் நடுநாயகமாய் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கும் பேரானந்தத் திருக்கோலம் ‘சோமாஸ்கந்தம்’ என்று குறிக்கப் பெறும். திருவாரூர் திருக்கோயிலின் உற்சவ மூர்த்தியான ஸ்ரீதியாகராஜர் சோமாஸ்கந்த வடிவினர். எண்ணிறந்த யுகங்களுக்கு முன்னர் திருப்பாற்கடலில் ஸ்ரீமகாவிஷ்ணுவால் பூசிக்கப் பெற்று வரும் இம்மூர்த்தி பின்னர் நான்முகக் கடவுளான பிரமனின் சத்தியலோகத்திலும் அதன் பின்னர் இந்திரலோகத்திலும் ஆராதிக்கப் பெற்று வருகின்றார். இறுதியாய், மண்ணுலகில் கோலோச்சி வரும் முசுகுந்த சக்கரவர்த்தியினால் இந்திரலோகத்தினின்றும் திருவாரூருக்கு எழுந்தருளி வருகின்றார்.
*
ஸ்ரீதியாகராஜ மூர்த்தியின் திருமேனி அதீத சானித்தியம் பொருந்தியது; பரம இரகசியமானது; அப்பரடிகளும் சம்பந்தப் பெருந்தகையும் பணிந்தேத்திய மூர்த்தி; சுந்தர மூர்த்தி சுவாமிகளும் பரவையாரும் பலகாலும் தரிசித்துப் போற்றித் துதித்துப் பரவிய திருமேனி. வருடத்தின் இரு புண்ணியத் திருநாட்களைத் தவிர்த்துப் பிற தினங்களில் இம்மூர்த்தத்தின் திருமார்பு வரை மலர்க் குவியல்களால் மறைத்திருப்பர். ஸ்ரீதியாகராஜ மூர்த்தியும், உடனிருந்தருளும் உமையன்னையும் பங்குனி உத்திரத் திருநாளன்று இடது திருப்பாத தரிசனமும், மார்கழித் திருவாதிரையன்று வலது திருப்பாத தரிசனமும் தந்தருள் புரிவர். கட்டாயம் தரிசித்துப் பயன் பெற வேண்டிய அற்புதத் திருக்கோலம்.
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி