“திருமகள்” பாற்கடலில் தோன்றியபோது திருமால் கூறியது!

345

oசிலந்திப்பூச்சியின் வாயிலிருந்து நுண்ணிய நூல் பெருக்கெடுப்பது போலவும், செந்தீயிலிருந்து நெருப்புப் பொறிகள் மேல் நோக்கி எழுவது போலவும், சகல உலகங்களையும் தன்னிச்சைப்படி தன் அருளால் தடையின்றி தோற்றுவிக்கும் உலகிற்கே தாயான மங்களகரமான அந்த தேவியின் இனையடிகளைப் போற்றுகிறேன்!

oதான் தோற்றுவித்த உலகங்கள் சற்றும் பிறழாத தாள கதியில் சீராக இயங்கிட தன் மாயா சக்தியை அவற்றினூடே செலுத்தி, அந்த அண்டங்களுக்கோர் சக்தியாய் தலைவியாய் விளங்குபவளின் தாள் போற்றி!

oஅஞ்ஞானத்தினால் மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று வினைப் பயனால் அல்லல் படுவோர்க்கும் பிறவிப்பிணியை அகற்றிடும் பெரும் ஞான ஒளியாக விளங்கும் அன்னையின் பத்ம பாதங்களைப் போற்றுகிறேன்!

o மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமான வித்தகத் திரு என்றும்

சர்வ சக்தியென்றும் போற்றப்படும் அந்த தேவியை துன்பங்களிலிருந்து விடுபடவும் உய்வு பெறவும் போற்றுகிறேன்!

oஅன்னையே போற்றி! உலக உயிர்களின் துயரை அழிப்பாய் போற்றி! எங்களை இடர்களிலிருந்து காப்பாற்றும் தாயே போற்றி! இருளகற்றி அன்பை உணர்வுறச் செய்வாய் போற்றி! பாவத்தால் பிறவி எங்களை அழுத்துகிறது. அந்த பாவச் சுமையிலிருந்து எங்களை விடுவிப்பாய் அம்மா! உன்னருள் என்னும் இன்பத்தை நல்லோர்க்கு அளிக்கக் கூடியவளே போற்றி! ஒளி மலர்க் கண்ணாளே போற்றி!

oஆயிரம் தாமரை இதழில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்புநிற ஆடையை விரும்பி அணிபவளே! தண்ணென்ற சரத்கால நிலவின் ஒளியினாளே! திருமங்கையே, நின் பாதங்கள் போற்றி!

oதன்னிகரில்லாத பிரகாசமான ஒளிபொருந்தியவள்! கடைக்கண் நோக்கினால் சகலருக்கும் அருள் மழை பொழிபவள்! செந்தழல் போல் மாசுமறுவற்ற பொன்னொளி வடிவினள்! அப்படிப்பட்ட தேவியின் திருத்தாள் போற்றி!

oதூய்மையான ரத்ன மாலையினைப் பூண்டவளும், மஞ்சள் பட்டு உடுத்துபவளும், பணிவோடு சிறிது அளித்தாலும், பலகோடி மடங்கு தனத்தினையளிப்பவளும், என்றும் இனிமையாகவும் இளையவளானவளும், மங்களங்களை எல்லாம் வாரி வழங்குபவளாகவும் விளங்கும் செல்வத்திருவே போற்றி! போற்றி!