உபி கோகிலவனத்தில் சனீஸ்வர பகவான்’ கோயில் கொண்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

70

மதுராவில், கண்ணபிரான் அவதரித்தபொழுது, எல்லா தேவர்களும் வந்து அவரைத் தரிசித்து மகிழ்ந்தனர். ஆனால், ஒருவருக்கு மட்டும் தரிசனம் கிடைக்கவில்லை. அதுவும் மாயக்கண்ணனின் லீலைதான்! மனமுடைந்த அவர், சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய வனத்தை அடைந்து அங்கு பகவானின் தரிசனத்துக்காக கடுந்தவம் புரிந்தார். மகிழ்ந்த கண்ணபிரான் அவருக்குக் காட்சியளித்தார்.
அப்பொழுது அவர், “”சுவாமி! பூவுலகில் மக்களின் முன்வினைப் பயனுக்கேற்ப நான் செயல்பட்டாலும், அவர்கள் என்னை கொடிய துன்பங்களையும், தண்டனைகளையும் அளிப்பவனாகவே கருதுகிறார்கள்; நான் என் கடமையைத் தானே செய்கிறேன்? பாருங்கள்! இங்கு உங்களைத் தரிசிக்கச் சென்ற பொழுது கூட, எனக்குத் தரிசனம் கிடைக்கவில்லை!” என்று முறையிட்டு வழிபட்டார்.
அதற்குக் கண்ணபிரான் “”கவலை வேண்டாம். நீ இங்கேயே கோயில் கொள்ளலாம்! இங்கு வருவோர் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, உன்னைத் துதித்து மகிழ்வார்கள்!” என்றருளினார்.
பகவானிடம் இப்படி ஆசி பெற்றவர் யார்? சனீஸ்வரன்தான்! பிரம்மாண்டமாகக் காட்சி தரும் சனி பகவானின் இத்திருக்கோயில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவுக்கு அருகில், “கோகிலவனம்’ என்ற இடத்தில் உள்ளது…
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி முதலான துன்பந்தரும் சனி அமைப்பு காலங்களில் இன்னல்கள் குறைந்து நலம் பெற, சனி வழிபாடு நன்று.