வெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்!

131

வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்த நன்னாளில் கந்தவேலனை தரிசித்து வணங்குவோம். நம் வேதனைகளையெல்லாம் போக்குவான் வேலவன். வெற்றியைக் கொடுத்து வாழச் செய்வான் முத்துக்குமரன்.
சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு என்றெல்லாம் இருக்கின்றன. இந்த வழிபாடுகளில், முருக வழிபாடு என்பதும் உண்டு. இதனை கெளமார வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
எளிமையான வழிபாடுகளைக் கொண்டவர் முருகப்பெருமான். மிகப்பெரிய ஹோமங்களோ நீளமான மந்திரங்களோ கூட அவசியமில்லை முருகக் கடவுளுக்கு. ஒரு அரோகரா கோஷம் போதும்… நம்மைக் காக்க ஓடோடி வருவான் வள்ளி மணாளன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவனாரின் மைந்தன் என்றாலும் அப்பன் சிவனுக்கே பிரணவப் பொருள் உரைத்து ஞானகுருவெனத் திகழும் முருகப் பெருமான், ஞானமும் யோகமும் தந்தருளக் கூடியவர். வீடு மனை யோகம் அமைத்து அருளும் அற்புதத் தெய்வம் என்றெல்லாம் போற்றுகின்றனர் பக்தர்கள்.
செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகக் கடவுள். எனவே முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் மட்டுமின்றி, சகல தோஷங்களும் நீங்கி, இன்னல்களில்லாமல் இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் உகந்தவை. அவருக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்வது விசேஷம். முருகப்பெருமானை கார்த்திகை நட்சத்திர நாளிலும் சஷ்டி திதி முதலான நாட்களிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை முதலான நாட்களிலும் தரிசித்து நம்முடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். ஸகந்த குரு கவசம் பாராயணம் செய்யலாம். அல்லது ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். இல்லத்தில், நல்ல அதிர்வுகளையும் அமைதியையும் உணரலாம்.
19ம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி. இந்த நன்னாளில், முருகப்பெருமானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி தரிசித்து பிரார்த்தனகள் செய்வோம். முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டு, அதனை அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி வந்தால், எதிர்ப்புகள் அழியும். எதிரிகள் பலமிழப்பார்கள். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
நம் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். வாழ்வில் இனி வெற்றிகள் அனைத்தையும் தந்தருளுவான் முத்துக்குமரன்.