அம்மை, தோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்!

207

அம்மை, தோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் என்ற ஊரில் உள்ள கோயில் கௌமாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் கவுமாரியம்மன் (கௌமாரியம்மன் (குழந்தை மாரியம்மன், காட்டு மாரியம்மன்)) மூலவராக காட்சி தருகிறாள். அரசமரம் தல விருட்சமாகவும், கிணற்று நீர் தீர்த்தமாகவும் உள்ளது. குழந்தை மாநகர் என்பதே இந்த ஊரின் புராணப் பெயராக இருந்துள்ளது.

ஆனியில் 10 நாட்கள் திருவிழா, நவராத்திரி, தினந்தோறும் ஒரு கால பூஜையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரு கால பூஜைகளுடன் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் காளியம்மன் மட்டும் தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். இத்தலத்தில் உள்ள விநாயகர் கன்னி மூல விநாயகர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருமணத் தடை நீங்க அரசமரத்தில் மஞ்சள் கயிறைக் கட்டுதல், குழந்தை பாக்கியத்திற்கு தொட்டில் கட்டுதல், பருக்கள் குணமாக உப்பு மிளகு காணிக்கை செலுத்துதல், விவசாயம் செழிக்க விசேஷ பூஜை என்று பரிகாரங்களும், வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறிய உடன் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி பால் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்தல், விவசாயத்தில் செழிப்பு அடைந்தவர்கள் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களைப் படைத்தல் அங்கப்பிரதட்சணம், முடி இறக்குதல், பால்குடம், மாவிளக்கு மற்றும் அக்னி சட்டி எடுத்தல் என்று தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

சுயம்புவாக தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். மேலும், இத்தலத்தில் அம்பாள் அமர்ந்து அருள் புரிவதாலேயே இந்தப் பகுதியானது விவசாயத்தில் செழித்தும், குறிப்பாக மாம்பழ விளைச்சலில் முன்னிலை பெற்றும் திகழ்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். அம்மை மற்றும் தோல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வராக நதியில் நீராடி அம்பாளை வணங்கி கோயிலில் தரும் தீர்த்தத்தை குடித்தால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

திருப்புகழில் குழந்தை மாநகர் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெரியகுளம் நகரில் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமாக கௌமாரியம்மாள் திகழ்கிறாள். தென் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் கௌமாரியம்மன் கோயிலும் ஒன்று. வேண்டிய காரியங்கள் நடக்க கோழி மற்றும் சேவல்களை கோயில் திருவிழாவின் போது மக்கள் முன்பு சூறை விடும் விநோதமான ஒரு வழக்கம் இந்தக் கோயிலில் உள்ளது.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன் தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள். அச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இதை தவிர்க்க காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர்.

அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள். அதன்பின், மக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கேயே இடம் பெயர்ந்தனர். அதன் பிறகு அம்மனின் அருளால் மக்கள் அனைவரும் சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி கவுமாரி என்று அழைத்தனர்.