அம்மை நோய் குணமாக அம்பாள் வழிபாடு!

93

அம்மை நோய் குணமாக அம்பாள் வழிபாடு!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோயில் தான் முண்டக கண்ணியம்மன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக முண்டககண்ணியம்மன் காட்சி தருகிறார். ஐப்பசி பௌர்ணியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால், இந்தக் கோயிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அம்பாளின் சுயம்பு வடிவத்திற்கு நாக கிரீடம் அணிவித்து 2 திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கின்றனர். தினந்தோறும் காலையில் 6 மணி முதல் 11.30 மணி வரையில் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது மட்டுமே அவளை சுயம்பு வடிவில் தரிசிக்க முடியும்.

அம்பாளிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் சந்தனம், மஞ்சள், குங்குமம், காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வது விஷேசம். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி நாளின் போது சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழிபடுவார்கள். ஆனால், இங்கு அம்பிகை பார்வதியின் அம்சம் என்பதால், இவளுக்கும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இவளுக்கு பிரசாதமாக படைக்க செய்யப்படும் பொங்கல் தயாரிக்க பசு மாட்டு0020சாணத்தில் செய்த வறட்டியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக கிடைக்கும் சாம்பலானது பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் அம்பாளுக்கு பூஜிக்கப்படும் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் பிராம்மி, மகேஷ்வரி, வைஷ்ணவி, வராஹி, கௌமாரி, சாமுண்டி, இந்திராணி ஆகிய சப்த கன்னிமார்களும் சிலை வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை மாங்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழாவும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று 1008 மலர் கூடை அபிஷேகம் செய்யப்படுகிறது. தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூஜை செய்யப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று 1008 பால்குட அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. நவராத்திரி நாளில் அம்பிகையானவள், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா வருகிறாள். வேண்டுகோள் வைக்கும் பக்தர்கள் அம்மனுக்கு வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அம்மை நோய் வந்தவர்கள், அம்பாளிடம் வேண்டுக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை. திருமண தோஷம், கண் நோய் நீங்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க அம்பிகைக்கு 23 விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

தல பெருமை:

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சத்துடன் முண்டகக்கண்ணியம்மன் காட்சி தருவதாக ஐதீகம். இந்தக் கோயிலில் அம்பாள் சன்னதிக்கு பின்புறம் ஆலமரம் இருக்கிறது. இந்த மரத்திற்குள்ளாக நாக புற்றும், அருகாமையில் நாக தேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாகதேவதைக்கு பால், மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயில் முகப்பு பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள், இந்த அரசமரத்தின் கீழ் நாகரை பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கின்றனர். மூலஸ்தானத்திற்கு இடது புறம் உற்சவ அம்பாள் சிம்மானத்தில் அமர்ந்திருக்கிறாள். இவளுக்கு இருபுறமும் சிம்ம வாகனம் இருக்கிறது. கோயில் பிரகாரத்தில் பிராம்மி, மகேஷ்வரி, வைஷ்ணவி, வராஹி, கௌமாரி, சாமுண்டி, இந்திராணி ஆகிய சப்த கன்னிமார்களும் சிலை  போன்ற லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இவர்களுக்கு இடது மற்றும் வலது புறம் ஜமத்கனி மகரிஷி மற்றும் அவரது மகன் பரசுராமர் ஆகிய இருவரும் காவல் தெய்வமாக இருக்கின்றனர்.

தல வரலாறு:

முன்பு ஒரு காலத்தில் அதான் பழங்காலத்தில் இந்தப் பகுதியில் தாமரை குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த மரத்திற்கடியில் அம்பாள் சுயம்பு ரூபமாக எழுந்தருளினாள். ஆரம்பத்தில் இந்த அம்மனுக்கு வெறும் ஓலக்குடிசை மட்டுமே வேய்ந்து சிறிய சன்னதியை பக்தர்கள் கட்டினர். பிற்காலத்தில் கோயில் பெரிதளவில் கட்டப்பட்டது. எனினும், அம்பிகையில் உத்தரவு கிடைக்காத தால் கோயிலில் மூலஸ்தானம் மட்டும் தற்போதும் குடிசையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எளிமையை உணர்த்துவதற்காக அம்பாள் ஓலைக்குடிசையின் கீழிருந்து பக்தர்களுக்கு அருள்வதாக சொல்லப்படுகிறது. அம்பிகையில் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு வடிவில் காட்சியளிப்பதால் முண்டகக்கண்ணியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். முண்டகம் என்றால் தாமரை என்பது பொருள்படும். சுயம்பு வடிவில் காட்சி தரும் அம்பிகையின் மத்தியில் சூலம் இருக்கிறது.