உடல் நலக் குறைபாடு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

67

உடல் நலக் குறைபாடு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி என்ற பகுதியில் உள்ளது மதிப்பநல்லூர் அம்மன் கோயில். இந்தக் கோயிலில் மதிப்பநல்லூர் அம்மன் மூலவராக காட்சி தருகிறார். மேலும், தாயார் மதிப்பநல்லூர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். வடக்கு நோக்கி இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் உண்டு. சித்ரா பௌர்ணமி நாளில் கொடுமுடியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

கோயிலின் முன் மண்டபத்தில் சூலமும் அம்மனின் சிம்ம வாகனமும் உள்ளன. மகா மண்டப நுழைவு வாயிலின் இரு பக்கமும் நாகலிங்கேஸ்வரர், அம்மன், நாகர் சிலைகள் உள்ளன. முன் மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் காட்சி தரும் சிலை காணப்படுகிறது. மகா மண்டபத்தில் காளியும், விநாயகரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், உடல் நலக் குறைபாடு நீங்கவும் பௌர்ணமி நாளில் ஸ்ரீசக்கரத்தின் மீது அவரவர் தங்களது ஜாதகத்தை வைத்து மூல மந்திரம் சொல்லி வழிபாடு செய்கின்றனர்.

இந்தக் கோயிலில் அம்மனின் முகமானது ஈசானியத்தை நோக்கி திரும்பிய வண்ணம் உள்ளது. பீடத்தில் மகிஷாசுரவரதம் காட்சி இடம் பெற்றுள்ளது. மூக்குத்தி அணிவிப்பதற்காக மூக்கில் சிறிய துவாரம் இருப்பதை அபிஷேகத்தின் போது காண முடியும். அம்மனுக்கு முன்பாக ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்வதற்கு முன்னதாக ஸ்ரீ சக்கரத்திற்கு முதலில் அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது.

கடந்த 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் மேலைச் சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் கோயிலில் உள்ள கனகசபையானது கட்டப் பெற்றது. அந்த கனகசபையில் உள்ள தூண் சிற்பங்களுக்கு தேவையான கற்கள் மருதமலையிலிருந்து கொண்டு வரப்பட்டது. மேலும், இந்த சிற்ப வேலைகள் அனைத்தும் பேரூருக்கே வடக்கே உள்ள ஒரு ஊரில் வைத்து நடந்தது.

அந்த ஊரை வடக்கு வழி என்று பேரூரைச் சேர்ந்தவர்கள் அழைத்தனர். அது வடவழி என்று மாறி நாளடைவில் வடவள்ளி என்றானது. மதிப்பநல்லூர் அம்மன் என்று பெயர் வந்ததற்கு காரணம், ராமேஸ்வரம் அருகிலுள்ள மதிப்பநல்லூர் என்ற ஊரில் உள்ள அம்மன் கோயிலிருந்து பிடிமண் எடுத்து வந்து இந்த வடவள்ளி என்ற ஊரில் வைத்து அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டதால் இந்த அம்மன் மதிப்பநல்லூர் அம்மன் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

கோயில் கருவறையில் உள்ள மதிப்பநல்லூர் அம்மன் 6 அடி உயர சிலா ரூபிணியாக அருள் பாலிக்கிறாள். ஆனால் இந்த சிலையானது கோயில் வளாகத்திலேயே வடிக்கப்பட்டது. நின்ற கோலத்தில் தனது வலது கைகளில் குழந்தை தலை, வாள், உடுக்கை, சூலாயுதம், இடது கைகளில் அக்னி, கடாயுதம், அட்சய பாத்திரம் ஏந்தி அஷ்ட புஜங்களுடன் அமைதியின் வடிவமாக அம்பிகை விளங்குகிறாள்.