எல்லா தோஷமும் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

123

எல்லா தோஷமும் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் என்ற ஊரில் உள்ள கோயில் சோழீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் சோழீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் சவுந்தரநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். கம்பத்தாண்டவருக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும், கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களிலும் பூஜைகள் செய்யப்படுகிறது.

தொடர்ந்து பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரி, சித்திரை வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று சோழீஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகிறது. கார்த்திகை தீப திருநாளில் 60 அடி தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் ஒருவாரம் வரையில் எரிவதால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்திலுள்ள குடும்பத்தில் நல்ல சூழல் ஏற்படும் என்பது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கிழக்கு நோக்கி கோயிலுக்கு நான்கு புறமும் பெரிய மதில் சுவர் எழுப்ப பெற்று முன்புறம் சுதைச் சிற்பங்களோடு கூடிய அழகான தோரண வாயில் அமைந்துள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

முன் மண்டபம் மற்றும் மகா மண்டபம் இரண்டிலும் நந்தியும், பலிபீடமும் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் கிழக்கு பார்த்தவாறு லிங்க திருமேனியராக இறைவன் சோழீஸ்வரர், பக்தர்களின் சோதனைகளை தீர்த்து, அவர்கள் வாழ்க்கையில் சாதனை புரிந்திட அருள் புரிகிறார்.

கோயில் பிரகாரத்தைச் சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். விநாயகர், துர்க்கை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி நடராஜர், சிவகாமி, கால பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள் சன்னதியும் அமைந்துள்ளது. தாயார் சவுந்தரநாயகி அம்மன் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். சோழீஸ்வரர் மற்றும் சவுந்தரநாயகி அம்மன் சன்னதிகளுக்கு இடையில் தனிச்சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள்புரிகிறார்.

காலபைரவருக்கு அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. செவ்வாய் தோறும் நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேதுவிற்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களின் மனச்சங்கடம் நீங்கும். ராகு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் சஷ்டி நாளில் இவரை செவ்வரளி கொண்டு பூஜித்து தேங்காய் மூடியில் தொடர்ந்து 6 வாரம் வரையில் நெய் தீபம் ஏற்றி வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் 60 அடி உயரத்தில் தீபஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதில் முருகப் பெருமானுக்கு தனி தன்னதி உள்ளது. ஆதலால், இவர், கம்பத்தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த சன்னதியின் வாயிலுக்கு அருகில் ஒரு பக்கம் ஆஞ்சநேயரது திருவுருவமும், மறுபக்கம் யானையின் திருவுருவமும் காணப்படுவது சிறப்பு.

மேலும், நர்த்தன கணபதி, பசுபதீஸ்வரர், சவுந்தரநாயகி தாயார் ஆகியோரது திருவுருவமும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு குருவார அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் நடைபெறும் போது அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கல்வி வளம் கிடைக்கும். தனம், தான்யம் பெருகும். தோஷங்கள் நிவர்த்தியாகும். குருவருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் காலையில் விஷக்கடி மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒருவகையான மூலிகை வேரை சோழீஸ்வரர் முன்பு வைத்து பூஜித்து அதனை மாலையாக அணிந்து கொள்ள கொடுக்கிறார்கள். மூன்று நாட்கள் வரையில் பத்தியம் இருந்து அந்த மாலையை அணிந்து கொண்டால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமாக சொல்லப்படும் உண்மை.

அமராவதி நதி பாய்ந்து விவசாயம் செழித்துள்ள பூமி மூலனூர். கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்த மூலன் என்ற முனிவரின் பெயரால் மூலன் மாநகரம், மூலன் நகர் என்று வழங்கப்பட்டு தற்போது மூலனூர் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்ட மூலன் சிவன் கோயில் ஒன்றை அமைக்க வேண்டுமென்று இந்தப் பகுதியை பூசகுலத் தொண்டைமானுக்கு வேண்டுகோள் வைக்கவே, உருவாக்கப்பட்ட கோயில் தான் இந்த சோழீஸ்வரர் கோயில்.