ஏமாற்றப்பட்ட காசு, பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

101

ஏமாற்றப்பட்ட காசு, பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் என்ற ஊரில் உள்ள கோயில் கொளஞ்சியப்பர் கோயில். இந்தக் கோயிலில் கொளஞ்சியப்பர் மூலவராக காட்சி தருகிறார். கோயிலில் கொளஞ்சிமரமே தல விருட்சமாக விளங்குகிறது. பங்குனி உத்திரம் 10 நாட்கள் திருவிழா சித்ரா பௌர்ணமி நாளில் 1008 பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். வைகாசி திங்கள் வசந்த உற்சவம் 10 நாட்கள் திருவிழா, லட்சார்ச்சனை சட்டத்தேரில் முருகன் விநாயகப் பெருமானுடன் வீதி உலா வருதல், மாதந்தோறும் கார்த்திகை திருநாளன்று சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன.

சந்தனத்தால் செய்து வைக்கப்பெற்றுள்ள முருகன் திருவுருவத்தை பீடத்தின் மீது நிறுவி கிரீடம் அணிவித்து உருவத்திருமேனியில் கொளஞ்சியப்பரை அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறும். அன்றும் ஏராளமான காவடிகள் வரும். ஐப்பசி திங்கள் கந்தர் சஷ்டி 6 நாட்கள் கொளஞ்சியப்பர் ஆறு வகையில் அலங்கரிக்கப்படுகிறார்.

ஏராளமான திருமண நிகழ்ச்சிகளும் இந்தக் கோயிலில் நடத்தப்படுகிறது. தை வெள்ளி, ஆடி வெள்ளிகளில் மாவிளக்கு இட்டு வழிபடும் பழக்கமும் உள்ளது. இத்தல முருகன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். கொளஞ்சியப்பரின் வலது பக்கத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் சித்தி விநாயகர் பெரிய திருமேனி கொண்டு காட்சி தருகிறார்.

இருவருக்குமே தனித்தனி விமானங்கள். கொளஞ்சியப்பர் விநாயகர் சன்னதிகளுக்கு எதிராக வேட்டைக்கு தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட 2 குதிரைகள் நிற்கின்றன. கோயிலின் பின்பக்கமாக இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனிக்கோயில் இருக்கின்றன. சுவாமி சன்னதிக்கு எதிரில் மகா மண்டபத்தை ஒட்டி சற்றே இடப்பக்கத்தில் முனியப்பர் சன்னதி உள்ளது.

முனியப்பருக்கு எதிரில் கல்லிலும் இரும்பிலும் வடிக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான சூலங்கள் மேல் நோக்கி நடப்பெற்றுள்ளன. இவற்றை அடுத்து சற்றே கிழக்கில் வீரனார் காட்சி தருகிறார். தம் குறை முடிக்க வேண்டி பிராது கட்டுதல் என்ற நேர்த்தி கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. பொருள் களவு போய்விட்டாலோ, கொடுத்த கடன் திரும்ப வராவிட்டாலோ, பிறர் தம்மை வஞ்சித்து விட்டாலோ கடும் நோயால் அவதி உற்றாலோ, குடும்ப பிரச்சனைகளால் வாடினாலோ, மகன் அல்லது மகளுக்கு திருமணம் தடைபட்டாலோ, வேலை கிடைக்காது, வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, வேறு யாதொன்று வேண்டி நின்றாலோ யாவற்றையும் இங்கே பிராது கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பிராது கொடுக்க நினைத்தால், ஒரு வெள்ளைத்தாளில் மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு என்று ஆரம்பித்து நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும் தனக்கு இந்த கோரிக்கை என்றும் தெளிவாக எழுதி கொளஞ்சியப்பர் சன்னதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால் அவர் அதனை கொளஞ்சியப்பர் கால் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து விபூதி பொட்டலமாக்கி தருவார். அதனை நூலால் கட்டி முனியப்பர் சன்னதியிலிருக்கும் வேலில் கட்டி தொங்க விட்டு விட்டு விடை பெற்று செல்ல வேண்டும்.

இப்படி வேண்டிக் கொள்ள 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் ஈடேறும். எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 10 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும். கோரிக்கை நிறைவேறினால் இந்த தேதியில் நான் வந்து வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.

குழந்தை வரம் கிடைக்க, கடன் தொல்லை நீங்க, திருடு போன பொருள் திரும்ப கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப வர, வேலை கிடைக்க, பணியிட மாற்றம் கிடைக்க, குடும்ப கஷ்டம் நீங்க, பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத நோய் குணமாக இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

ஆடு மாடு கோழி தானம், எடைக்கு எடை நாணயம் வழங்குதல், முடி எடுத்தல், பால் குடம் எடுத்தல் ஆகியவை இங்கு விசேஷம். பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்தல் இங்கு விசேஷம். உடலெங்கும் அலகு குத்தி வருதல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. உண்டியலில் குண்டு, பொன் தாலி, வெள்ளியில் பரு முதலியன நீங்கப்பெற்றவர்கள் அதன் வடிவில் செய்து வழங்கும் பரு உருண்டை, கண்ணடக்கம், மனிதர் கை, கால், வயிறு ,மார்பு, வடிவில் செய்யப்பெற்ற வெள்ளி உடல் உறுப்புகள், தொட்டிலில் கிடைக்கும் குழந்தை வடிவங்கள் யாவும் நேர்த்திக்கடன்களாக செலுத்தப்படுகின்றன.

கருவறை பின்பக்கம் வேப்பமரம் மற்றும் அரச மரங்களில் குழந்தை உறங்குவது போன்று ஒரு கல் வைத்து சிறு ஏணைகள் கட்டி தொங்க விட்டு பிள்ளை வரம் வேண்டுதல் உண்டு. தொட்டில் கட்டுதல், பூஜைமணி வாங்கி வைத்தல், விளக்குகள் வாங்கி வழங்குதல் ஆகியவற்றையும் பக்தர்கள் செய்கின்றனர்.

கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா, உளுந்து, பயிறு கொள்ளு, நவதானியங்கள், மஞ்சள், முந்திரி, கனி வகைகள், மா, பலா, வாழை, அனைத்து காய்கறிகள், பசுமாடுகள், காளைகள், எருமை, கன்றுகள், கோழிகள் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன்களாக கொடுக்கின்றனர். இதுவே வசதி படைத்தவர்களாக இருந்தால் தாங்களாகவே உணவு தயார் செய்து படையலிட்டு நைவேத்தியம் செய்து மற்றவர்களுக்கும் அன்னதானம் செய்கின்றனர்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர். உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்கு புலப்படா அருவத்திருமேனியினரும் அல்லர். அருவமும், உருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள் பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலி பீட பிரதிஷ்டையே மூலஸ்தானம்.

கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீசக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிஷேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகவும் முருகப் பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன. வேப்பெண்ணெய்யை பக்தர்கள் வாங்கி சென்று கொளஞ்சியப்பர் சன்னதியில் உள்ள அர்ச்சகரிடம் கொடுக்க, அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து கொளஞ்சியப்பரின் அருள் மருந்தாகிய விபூதியை அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார்.

தீட்டு தடங்கல் இல்லாத நீராடி தூய்மையாக இருந்து இந்த எண்ணெய்யை பெற்று தடவினால், தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகிவிடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள் முதுகுப்பக்க பிள்ளைகள் ,முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்குக்கும்  கொளஞ்சியப்பர் அருள் கலந்த இந்த எண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது.

இந்த எண்ணெய் வெளிநாடு, வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பிறந்த 90 நாட்கள் கழித்த குழந்தைக்கு பெயர் வைத்தல், சட்டை போடுதல், நகை அணிவித்தல் ஆகிய வைபவங்கள் இங்கு மிகவும் விசேஷம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோயிலுக்கு வரும் வரையில் சட்டை போட மாட்டார்கள். பொட்டு வைக்கவும் மாட்டார்கள். இந்த சன்னதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு பொட்டு வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழலைநாதர் கோயிலில் சிவபெருமான் விருத்தாம்பிகையுடன் அருள் பாலிக்கிறார். விருத்தம் என்றால் பழமை என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி அவர்களை வணங்கிவிட்டு பாடாமல் சென்றுவிட்டார்.

சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் பிடிக்கும். அதே ஆவல் அம்பிகைக்கும் இருந்தது. உடனே சிவன், முருகப் பெருமானை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து சுந்தரரிடமிருந்து பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் தந்துவிடு என்று சுந்தரர் வேடுவனிடம் வேண்ட, அதனை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

இறைவன் செயலால் இப்படி நடந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு பாடல் பாடி இழந்ததை பெற்று சென்றார். இதையடுத்து, சுந்தரரை வழிமறித்த வேடுவராக வந்த முருகப் பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள் பாலிக்கிறார். முருகன் தோன்றிய இடத்தில் குளஞ்சி எனப்படும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் இவர் குளஞ்சியப்பர் எனப் பெயர் பெற்றார். நாளடைவில் கொளஞ்சியப்பர் என்று மாறியது.