கடக ராசிக்காரர்களின் திருமண யோகம்

86

குரு பெயர்ச்சியில் கடகம் ராசிக்காரர்களுக்கு முழுமையான திருமண யோகம் உள்ளது. இதுவரை தடைப்பட்டு இருந்த திருமண பேச்சுவார்த்தைகள் கூட இனி நல்ல முடிவுக்கு வந்தே தீரும்.

கடக ராசிகுரு பெயர்ச்சியில் கடகம் ராசிக்காரர்களுக்கு முழுமையான திருமண யோகம் உள்ளது. இதுவரை தடைப்பட்டு இருந்த திருமண பேச்சுவார்த்தைகள் கூட இனி நல்ல முடிவுக்கு வந்தே தீரும். குரு பகவான் கடகம் ராசிக்காரர்களுக்கு 6-ம் இடத்துக்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். இந்த 6-ம் இடம் என்பது தனுசு ராசியாகும். 6-ம் இடத்துக்கு அதிபதி 6-ம் இடத்துக்கே வந்து இருப்பதால் மங்கல காரியங்களில் எது செய்தாலும் அது வெற்றியாக நிறைவேறும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியில் முதலில் மகர ராசியில் சஞ்சரிப்பார். குரு பகவானுக்கு மகர ராசி நீச்ச வீடாகும். எனவே மகரத்தில் இருக்கும் நாட்களில் நல்ல மாற்றங்கள் ஒன்று சேரும். குறிப்பாக கல்யாண வாய்ப்புகள் கைகூட செய்யும். பெண்களுக்கு நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்பு உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கடகம் ராசி பெண்கள் சர்பகிரக வழிபாடு செய்து வந்தால் இந்த பலன்களை பெற முடியும்.

கடகம் ராசியில் புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய 4 நட்சத்திரங்கள் உள்ளன. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வந்தால் நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடுதுறையில் உள்ள அஷ்டபுஜம் துர்க்கையை வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஅனந்த பத்மநாபன்-ஸ்ரீஹரி லட்சுமியை வழிபட்டு வந்தால் மங்கல காரியம் தேடி வரும். திருவனந்தபுரம் செல்ல இயலாதவர்கள் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு வரலாம்.

கடகம் ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியில் மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து செய்வது நல்லது. இதன் மூலம் இந்த குரு பெயர்ச்சியில் பொருளாதார வளம் மேம்படும். அது சுப காரியங்களுக்கு உதவி செய்வதாக இருக்கும். சிலருக்கு இந்த குரு பெயர்ச்சி முதலில் சற்று அலைச்சலை உருவாக்கலாம். மனதில் சலிப்பு ஏற்படலாம். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த துடியலூரில் உள்ள கவைய காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்க வேண்டும். கோதுமை தானம் தந்தால் குடும்ப பிரச்சினை தீரும். சுப காரியங்கள் கைகூடி வரும்.

வைணவத்தை பின்பற்றுபவர்கள் ஏகாதசி நாட்களில் விரதம் இருந்தால் முன்னேற்றத்தை காணலாம். சைவத்தை பின்பற்றுபவர்கள் தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தென்குடிதிட்டையில் உள்ள குரு பகவான் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு வந்தாலும் நல்லது நடக்கும். குறிப்பாக வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு வில்வம் அர்ச்சனை செய்வது கைமேல் பலன் தரும். தொடர்ந்து 21 வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மாலை அணிவித்து 3 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த வழிபாடு காரணமாக தள்ளிப் போய் கொண்டிருக்கும் திருமணம் கூட உடனே கைகூடி நல்ல முடிவு உண்டாகும்.

பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால் நல்லது. அதுபோல பவுர்ணமி நாட்களிலும் அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் திருமண பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டாகும். குரு பகவானின் பார்வை மற்றும் நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது காளி வழிபாடும் உதவியாக அமையும். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள பாரியூரில் அருள்புரியும் ஸ்ரீகொண்டத்து காளியை வழிபட்டால் குடும்பத்தில் நல்லது நடக்கும்.

காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் லட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் திருமண லட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள்.

கடகம் ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியில் ஆபத்தில் கைகொடுக்கும் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். ஆபத்து வரும் போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை திருத்தலம்.

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும். தற்காலம் ஆடுதுறை என அழைக்கப்படும் இவ்வூர், சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பூபாளகுலவள்ளி வளநாடு, துரைமூர்நாடு என்று அழைக்கப் பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் வள்ளலாரால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம் இதுவாகும்.

இத்தல இறைவனின் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர், தன்னை சரணடைந்த சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலியிடம் இருந்து காப்பாற்றி அருள்புரிந்தார் ஆடுதுறை ஈசன். இதனால் அவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார் என்று தல புராணம் சொல்கிறது.
சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தில்லை திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்காகவும், வியாக்கிர பாதருக்காகவும் ஆனந்த திருநடனத்தை ஆடிக் காண்பித்தார் சிவபெருமான். அதைக் கேட்டு பிரமிப்பில் ஆழ்ந்த தேவர்களும், பிற முனிவர்களும் தங்களுக்கும் அந்த நடனத்தை இவ்வாலயத்தில் ஆடிக் காண்பிக்க வேண்டும் என்று ஈசனை வேண்டினர். அதன்படி ஈசன் ஆடுதுறையிலும் ஆனந்த தாண்டவத்தை ஆடி அருளினார். எனவே நடனக் கலையில் சிறந்து விளங்க விரும்பு வோர், சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போல, இத்தல இறைவனையும் பிரார்த்திக்கலாம்.

கருவறையின் முன் நந்தியம்பெருமானை பார்த்து புன்னகைத்தவாறு ஆபத்சகாயேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலய முருகப்பெருமான் அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர். சுவாமியின் கருவறையைச்சுற்றியுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெரு மானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராக சந்திப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத காட்சியாகும். ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த தந்தை – மகன், இவ்வாலயம் வந்து முருகப்பெருமானை வேண்டி பரிகார பூஜை செய்துக் கொண்டால், வினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

தீவிர சிவ பக்தராக விளங்கிய ஹரதத்தர், அனுதினமும் திருநீலக்குடி, திருக்குழம்பியம், திருக்கோடிக்காவல், கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு, இறுதியாக ஆடுதுறை இறைவனை தரிசித்து விட்டுதான் உணவு அருந்துவாராம். ஒருநாள் காவிரியில் வெள்ளம் காரணமாக தண்ணீர் அதிகமாக ஓடிற்று. ஆற்றை கடந்துச் சென்று இறை தரிசனம் செய்ய முடியாமல் தவித்த ஹரதத்தர், தனக்கு ஏற்பட்ட இன்னலைத் தவிர்க்க வேண்டும் என இத்தல இறைவனிடம் முறையிட்டார். இதையடுத்து ஆற்றின் அக்கரையில் இருந்த ஹரதத்தருக்கு, இறைவன் அங்கேயே காட்சி தந்து அருள்புரிந்தாராம்.

இவ்வாலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து உற்சவங்களும், திருவிழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.கடகம் ராசிக்காரர்கள் இந்த தலத்துக்கு சென்று அஷ்டபுஜ துர்க்கையை வழிபட்டால் திருமண அதிர்ஷ்டம் அணிவகுத்து வருவதை அனுபவப்பூர்வமாக காண்பார்கள்.

லட்சுமி வழிபாடு

மாதுளம் பழம் செல்வ மகளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அந்த மாதுளம் பழங்களை கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச் சனை செய்து வழிபடும் ஒரு முறை தான் பழ வர்க்க அர்ச்சனை முறை. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை யில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள்ளாக இந்த பழ வர்க்க அர்ச்சனை பூஜையை செய்து விட வேண்டும்.

ஒவ்வொரு சில்லரை நாணயங்களுடன் சிறிது மாதுளம் பழ மணிகளை சேர்த்து லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்திற்கு லட்சுமி மந்திரங்களை துதித்தவாறு அர்ச்சனை செய்ய வேண்டும். லட்சுமி தேவிக்கு இந்த மாதுளம் பழ வர்க்க அர்ச்சனை செய்து முடித்த பிறகு, அந்த மாதுளம் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பிரசாதமாக தர வேண்டும். இந்தப் பழ வர்க்க அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தற் போதைய குரு பெயர்ச்சி காலத்தில் செய்தால் திருமண யோகம் கை கூடி வரும்.