கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது: திருஷ்டி பரிகாரங்கள்!

210

கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது: திருஷ்டி பரிகாரங்கள்!

கல்லடி பட்டாலும் படலாம், ஆனால், கண்ணடி படக்கூடாது என்பது நம் முன்னோர்களின் பழமொழி. கெட்ட எண்ணங்களின் தீய சக்தியே இந்த கண் திருஷ்டி. கண்ணேறு என்று மற்றொரு பெயரும் உண்டு. பொதுவாக திருஷ்டி நமக்கு மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், திருஷ்டி செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.

ஒரு மாந்தோப்பில் மாங்காய் கொத்து கொத்தாக தொங்கியதைக் கண்ட பொறாமை குணம் கொண்ட வழிப்போக்கனின் பார்வை அதன் மீது பட்டது. அப்புறம் என்ன, ஒருவிதமான நோய் தாக்கி அந்த மரமே, பட்டுப்போய்விட்டது. ஆனால், தோப்பில் இருந்த மற்ற மாங்கா மரங்கள் செழிப்போடு தான் இருந்தது. கல்லால் அடித்து மாங்காய் பறித்திருந்தால் கூட ஒரு சில மாங்காய்கள் தான் சேதமடைந்திருக்கும். ஆனால், அவரது கண் பட்டதனால், அந்த மரமே பட்டு போய்விட்டது. இதைத் தான் கண் பார்வை தோஷம் என்று கூறுவார்கள்.

கண் திருஷ்டி கணபதி:

சரி, இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்கிறீர்களா? திருஷ்டிக்காக கண் திருஷ்டி கணபதி படம் கொண்ட புகைப்படத்தையோ அல்லது டைல்ஸ் கல்லால் செய்யப்பட்ட கண் திருஷ்டி கணபதி படத்தையோ வீட்டில் வாங்கி வைப்பதுண்டு. இதன் மூலமாக, வீட்டிற்குள் வரும் கண் திருஷ்டி தோஷங்கள் நீக்கப்படும் என்பது நம்பிக்கை. கண் திருஷ்டியால் ஏற்படும் மொத்த பாதிப்புகளையும் திருஷ்டிக்காக வைக்கப்படும் விநாயகர் தன்னுள் கிரகித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆதலால், தான் ஒவ்வொரு வீடுகளிலும் கண் திருஷ்டி கணபதி முதல் பல்வேறு வகையான திருஷ்டிக்கான பிள்ளையாரின் உருவப்படங்கள் வைக்கப்படுகின்றன.

ஆனால், சிலைகளாக வைக்கும் போது அந்த விநாயகருக்குரிய பூஜைகளை நாம் தவறாமல் செய்ய வேண்டும். பூஜையே செய்யாமல் வெறும் சிலைகளை மட்டுமே வைத்துவிட்டு அப்படியே விட்டு விட்டால், அதுவே உங்களுக்கு தோஷத்தை ஏற்படுத்திவிடும்.

பூ, பழம், தேங்காய் வாங்கி பூஜை செய்ய முடியாதவர்கள் தினமும் விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து தீபாராதனை மட்டுமே கட்டினால் கூட போதுமானது.

வாழை மரம்:

திருமணம், காது குத்து, சடங்கு என்று ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளின் போது வீட்டிலோ அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்திலோ குலை தள்ளி பூவுடன் இருக்கும் வாழை மரத்தை கட்டுவார்கள். இதற்கு என்ன காரணம் என்ற் கேட்டால், இந்த கால தலைமுறையினருக்கு தெரிவதில்லை. இதற்கு ஒரேயொரு காரணம் தான் அதாவது, திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் வாழை மரத்திற்கு உண்டு என்பது தான்.

உப்புக் குளியல்:

கட்டுமஸ்தான உடம்புடன் தங்க நகைகள் அணிந்து எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரை கெட்ட எண்ணம் கொண்டவர்கள் பார்த்தாலே போது அவரது உடல் பாதிக்கப்படுவதோடு, தங்க நகைகள் இருக்கும் இடம் கூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர கண் திருஷ்டி நீங்குவதோடு, நீங்கள் செய்த பாவங்களும் ஒழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரத்தி தட்டு:

ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுப்பது நமது பழக்கம். மணமக்கள் வருதல், குழந்தை பிறந்து தூக்கி வருதல் உள்பட சுப நிகழ்ச்சிகளில் ஆரத்து எடுத்து வரவேற்பதோடு நெற்றியில் பொட்டு வைப்பதும் வழக்கம். ஆரத்தி எடுக்கும் போது நாம் பயன்படுத்தும் குங்குமம், மஞ்சள் கலந்த நீர், வெற்றிலை மற்றும் கற்பூரம் ஆகியவற்றிற்கு தீய சக்திகளை விரட்டும் தன்மை உண்டு.

வீட்டில் வைக்கும் கண்ணாடி:

அலுவலகத்திற்கோ அல்லது வீட்டிற்கோ வருபவர்களின் பார்வையை திசை திருப்புவதற்கு பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். ஏனென்றால், கண்ணாடிக்கு திருஷ்டியை நீக்கும் தன்மை இருக்கிறது. வீட்டு வாசலில் முள் செடி, மஞ்சள் ரோஜா, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி ஆகியவற்றை வைக்கலாம்.