காய்ச்சல் குணமாக மிளகு ரசம் பரிகாரம்!

115

காய்ச்சல் குணமாக மிளகு ரசம் பரிகாரம்!

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை, காங்கேயம் ஊரில் உள்ள கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக காட்சி தருகிறார். உற்சவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வள்ளி மற்றும் தெய்வானை தாயார் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

ஆண் மற்றும் பெண் மரங்கள் பிணைந்த நிலையில் உள்ள தொரட்டி மரம் தல விருட்சமாக விளங்குகிறது. இந்த ஊரில் புராண பெயர் பட்டாலியூர். காசி தீர்த்தம் புனித தீர்த்தமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா 16 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என்று ஆண்டு முழுவதும் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசித்தாலும் சரி, சூரிய நாராயணர் கோயிலுக்கு சென்று சூரியனை தரிசித்தாலும் சரி என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன், இந்தக் கோயிலில் வழிபாடு செய்வதால் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சைதன்ய சொரூபமாக சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. உட்பிரகாரத்தில் குகையில் சிவ வாக்கியர் அமர்ந்த நிலையில் வள்ளியோடு சுப்பிரமணியர் அருளும் காட்சி உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் குன்றில் மேல் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 496 படிகள் கொண்டுள்ளது. இந்தப் படிகள் ஏறிச் சென்றால், ராஜ கோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் அமைப்பில் முழுவதும் இந்தக் கோயிலானது கற்களால் கட்டப்பட்டுள்ளது.

மலையில் ஏறி, ராஜ கோபுர மண்டபம், தீபஸ்தம்பம் செல்வதற்கு முன் அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர், தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும், தண்டபாணி சன்னதி, கொடிமரம், பலி பீடம், சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள், மலையை சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது.

எட்டு அம்மன்கள்:

ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், கரிய காளியம்மன், செல்வநாயகி அம்மன், அந்தனூரம்மன் என்று 8 அம்மன்கள் எழுந்தருளியுள்ளனர்.

வழக்குகள் தீர்வு:

மலையேறும் 18 ஆம் படிக்கு சத்தியப்படி என்ற பெயரும் உள்ளது. முற்காலத்தில் வழக்குகள் இந்தப் படியில் நடந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. சடைச்சியம்மன் இங்கு குடியிருப்பதாக நம்பிக்கை உள்ளது. மலை படிகளில் ஏறுவதே ஒரு தவமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் சனி பகவான் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். மீதமுள்ள எட்டு கிரகங்களும் சூரியனை பார்த்து அமைந்துள்ளன.

சனி, குரு, ராகு, சுக்கிரன், கேது வரிசையாக காட்சியளிக்கின்றன. அதே போன்று சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் காட்சி தருவது கோயிலின் சிறப்பு., ஒவ்வொரு நவக்கிரக கோயில்களுக்கும் தனித்தனியாக சென்று வழிபடுவதன் பலன் இந்தக் கோயிலில் உள்ள நவக்கிரகங்களை வழிபடுவதன் மூலம் கிடைக்கும்.

நவக்கிரக சன்னதி வழிபாடு:

வேண்டியவருக்கு வேண்டியதை வழங்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில் மேன்மை அடையவும், நோய் பாதிப்பு நீங்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள நவக்கிரக சன்னதியை 9 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்.

மிளகு ரசம் பரிகாரம்:

இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகனுக்கு சிவ + அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல் சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகு ரசம் வைத்து, இந்தக் கோயிலில் வைத்து பூஜை செய்து குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்பது ஐதீகம்.

அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளதாகவும், எப்போதும் இறைவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடைச்சி என்ற பெண் கங்கையின் சிறப்பு அறிந்து கங்கை செல்ல வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியுள்ளார்.

முருகனுக்கு அந்த சடைச்சி என்ற பெண்ணிற்கு காசி, கங்கை  தீர்த்தத்தை உருவாக்கி காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு தான் முதல் பூஜை செய்யப்படும். ஆனால், இந்தக் கோயிலில் விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால், மூலவருக்கு முதல் பூஜை செய்யப்படுகிறது.

கோயில் கருவறையில் வள்ளியம்மை சமேத ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணவாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானை நினைத்து வள்ளி இந்தக் கோயிலில் தவமிருந்து அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆதலால், அந்த அறச்சாலையானது வள்ளியறச்சாலை என்று ஆனது. அதோடு, நாளடைவில் இந்த வள்ளியறச்சாலையானது வள்ளியரச்சல் ஆகியுள்ளது. காங்கேயம் பகுதியில் ஒரு சாலை வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருமண கோலத்திலும், வள்ளி, தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகளும் இந்தக் கோயிலில் உள்ளது. அனைத்து நோய்களும், பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது. சித்தர்கள் பலரும் இந்த மலையில் தவமிருள்ளனர். இன்றும், இந்த மலையில் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் இருந்து வருகிறது.

உத்தரவு பெட்டி:

ஆண்டவன் உத்தரவு பெட்டி சிவன்மலை கோயில் சிறப்புகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயரும் உள்ளது. ஆண்டவன் உத்தரவு மூலமாக சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களது கனவில் தோன்றி குறிப்பால் உணர்த்தி அது தொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.

பக்தர்களது கனவில் தோன்றி கூறிய பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தால், அந்த பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என்று சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ போட்டு கேட்கின்றனர். அப்படி அனுமதி கிடைத்தால் முன்னதாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு இந்த புதிய பொருட்களை அந்த உத்தரவு பெட்டியில் வைக்கின்றனர்.

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து மின் மோட்டார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது – சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது பைக், மொபட் என்று வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது.

தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி வந்தது. மணல் வைத்து பூஜை செய்த போது மணல் விலை அதிகரித்தது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என்று பொருட்கள் வைத்து பூஜை செய்த போது அவற்ற்ன் விலை பல மடங்கு உயர்ந்தது. இப்படி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லதும் நடக்கிறது, கெட்டதும் நடக்கிறது.

கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்மலை. தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் சிவமலை குறவஞ்சி என்று பழங்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. கொங்கு நாட்டிலுள்ள 24 உறுப்பு நாடுகளில் காங்கேய நாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இந்தப் பெயர் பெற்றது. கங்கர்கள் ஆண்டது என்று பல்வேறு வரலாறுகள் உள்ளது.

காங்கேயம் நாடு கோயில்கள் நிறைந்த நாடு. இன்றும் பழமையான கோயில்கள் காங்கேயம் நாட்டில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என்று குறிக்கப்படுகிறது. கோயிலின் அடிவாரத்திலுள்ள பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதங்கள் நிறைந்த சிற்பங்கள், 13 கல்வெட்டுகள் காணப்படுகிறது.

சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என்று பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவர்ந்து வந்த காரணத்தில் ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன் – வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. பதினெட்டு சித்தர்களில் சிறப்பு பெற்றவரும் சிவ வாக்கியம் என்ற நூலை இயற்றிய சிவஞானியும், சித்தருமாகிய சிவ வாக்கியர் அமைத்த கோயில் இது. முருகப் பெருமானின் உபதேசத்தால் சிவ வாக்கியம் இந்தக் கோயிலை அமைத்ததால் சிவமலை என்று பெயர் பெற்றது. அதன் பிறகு நாளடைவில் சிவன்மலை என்றானது.

பார்வதி தேவியின் பாதங்களில் உள்ள அணிகலன்களிலிருந்து நவரத்தினங்கள் தெறித்து விழுந்தன. அந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி அவர்களது வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. சிவாசலம், சிவராத்திரி, சிவசைலம், சிவமாமலை, சிவகிரி, சிவநாகம் எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என்று பல பெயர்களில் சிவமலை குறிப்பிடப்படுகிறது.

திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக் கணையாக வைத்து மேருமலையை வில்லாக வளைத்த போது மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேய நாட்டில் விழுந்தது சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது.

வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு, கலை வளரும் நாடு, சிவன்மலையில் சீருடன் தேரோட்டும் நாடும், செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது. முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போன்று இங்கு அரிய வகை கற்கள், நவரத்தின கற்கள், எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.