கால சர்ப்ப தோஷம் நீக்கும் கருட பஞ்சமி!

240

கால சர்ப்ப தோஷம் நீக்கும் கருட பஞ்சமி!

நாகபஞ்சமி, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி நாட்களில் விரதம் இருந்தால் கால சர்ப்ப தோஷம் தீரும், கணவரின் ஆயுள் அதிகரிக்கும். நாளை கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரதங்கள் மிக முக்கியமானவை. நாகம் மகா விஷ்ணுவிற்குப் படுக்கை, சிம்மாசனமாக இருப்பதைப் போல, கருடன் வாகனமாக இருக்கிறார். நாகத்தை அடக்கி ஆளக்கூடியவராகக் கருடர் உள்ளார். முற்பிறவியில் ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்த சர்ப்ப ஹத்யாதி தோஷங்கள் தீர்ந்து சத்புத்திர பிராப்தி கிடைக்க இந்த விரத பூஜைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

இந்து சமய வழிப்பாட்டில் நாகர் எனப்படும் பாம்புக்கும் முக்கிய இடம் உண்டு. பல்வேறு புராணக் கதைகளில் நாகத்திற்குச் சிறப்பிடம் உள்ளது. அதில் ஒன்று வாசுகி என்ற நாகம் பற்றியது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க முயன்றார்கள்.

மந்தார மலையை மத்தாக வைத்து அமிர்தம் கடைய அவர்கள் முடிவு செய்தார்கள். மலையைக் கடைவதற்கான கயிறாக வாசுகி என்னும் பாம்பு செயலாற்றியது. அதன் மூலமே அமிர்தத்தைத் தேவர்களும் அசுரர்களும் பெற்றார்கள் என்கிறது புராணக் கதை.

விஷ்ணு, கிடந்தால் படுக்கையாகவும், அமர்ந்தால் சிம்மாசனமாகவும், நின்றால் குடையாகவும், நடந்தால் நரனாகவும் (லஷ்மணன்) கூடவே இருப்பது அனந்தன் என்ற பாம்புதான். பாம்பு சிவனின் கழுத்தைச் சுற்றித் தவழுகிறது.

நாகரைப் பூஜித்தால் கை மேல் பலனுண்டு என்பதைக் குறிக்கும் கிராமப்புறக் கதை ஒன்று மிகவும் பிரபலம். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமம் அது. அங்கு ஏழு அண்ணன்களைக் கொண்ட பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். தினமும் அண்ணன்கள் வயலில் வேலை செய்யக் காலையிலேயே சென்று விடுவார்கள்.

அவர்களுக்குக் கஞ்சிக் கலயத்தில் சமைத்த மதிய உணவை எடுத்துச் செல்வது தங்கையின் பொறுப்பு. கொதிக்கும் உணவு சரியான பதத்திற்கு ஆற வேண்டுமென்பதால், கலயத்தைத் தலையில் திறந்து வைத்து எடுத்துச் செல்வது அப்பெண்ணின் வழக்கம்.

அவ்வாறு ஒரு நாள் தலையில் கலயத்தை வைத்து எடுத்துச் சென்றபோது, வானில் கருடன் ஒன்று தன் கால்களில் பாம்பு ஒன்றைக் கொத்தி எடுத்தபடியே பறந்து சென்றது. கருடன் கிடுக்கிப்பிடியாய்ப் பிடித்திருந்ததால் பாம்பு தாங்க முடியாத வலியில் விஷத்தைக் கக்கியது. அவ்விஷம் நேராக அப்பெண்ணின் தலையில் வைத்திருந்தக் கலயத்தில் விழுந்தது. அதனை அறியாத அப்பெண், எப்பொழுதும் போல் தனது அண்ணன்களுக்கு உணவு அளித்தாள்.

இதனை உண்ட அவர்கள் ஒவ்வொருவராக இறந்து விழுந்தனர். அன்பும் பாசமும் கொண்ட அப்பெண் துடித்துக் கதறினாள். அம்மா, அம்மா என்று அரற்றினாள். தன்னைத்தான் அழைக்கிறாள் என்று நினைத்த பார்வதி தேவி, சிவபெருமானுடன் காட்சி அளித்தாள். அப்பெண்ணும் அழுது அரற்றியபடியே நிகழ்ந்தவற்றை விளக்கினாள்.

பார்வதி தேவி, சில விரத முறைகளைக் கூறி அவற்றைச் செய்தால் அவளது அண்ணன்கள் உயிர் பெறுவார்கள் என்று கூறினாளாம். அவளும் அதன்படியே அருகில் இருந்த பாம்புப் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் தடவிப் பூக்களால் அர்ச்சித்தாள். பின்னர் புற்றுக்குப் பால் வார்த்து, நாகரைப் பணிந்தாள்.

அவளது விரதம் பயனுறும் வகையில் அண்ணன்கள் எழுவரும் தூங்கி எழுந்ததைப் போல் விழித்து எழுந்தனர். இதனடிப்படையில் இன்றும் பெண்கள் நாகரைப் பூஜிப்பது வழக்கம். அதுமுதல் ஆடி, தை மாதங்களில் உள்ள அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் புற்றுக்குப் பால் வார்த்துப் பூஜித்தல் பெண்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை வரும் நாக பஞ்சமி தினத்தன்று பெண்கள் நாகருக்கு சிறப்புப் பூஜை செய்வர். சில ஆண்களும் புற்றுக்குப் பால் வார்ப்பது உண்டு.

நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்வது வழக்கம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

பெருமாளைத் தாங்கும் பாக்கியம் பெற்ற கருடன் தனது தாயை அடிமைத் தளையில் இருந்து மீட்ட நாள் என்பதால், நாக பஞ்சமியன்று கருடனையும் பூஜித்தல் விசேஷம். காஷ்யபரின் மகனான கருடன், பல்லாயிரக்கணக்கான தனது நாக சகோதரர்களில் எட்டு நாகங்களை ஆபரணமாகத் தனது உடலில் தரித்துள்ளார். பெருமாள் கோவில்களில் விஷ்ணுவின் எதிரே கை கூப்பிய வண்ணம் இருக்கும் பெரிய திருவடியான கருடனைப் பூஜிப்பவரின் பிள்ளைகள் பலவான் ஆவார்கள் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் வரும் நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரதங்கள் மிக முக்கியமானவை.

நாக சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 1 (ஆடி16) திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி ஆகஸ்ட் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் என்றாலே திருவிழாக்கள், விரதங்கள் நிறைந்த மாதம். அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் நிறைய விரதம், பூஜைகள் அனுஷ்டிக்க வேண்டிய பல விசேஷங்கள் நிறைந்ததாக உள்ளது.

இதில் குறிப்பாக நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி விரதங்கள் மிக முக்கியமானவை. இந்த விரதத்தைத் திருமணமான பெண்கள் மேற்கொண்டால், அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளின் ஆயுள், ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

நாகர், கருடர் பகை:

காஸ்யப மாமுனிவரின் பத்தியான கத்ருவின் புதல்வர்கள் நாகர்கள், மற்றொரு துணைவி வினதையின் புதல்வர்கள் நாகர்கள். இவர்களிடையே மாற்றாந்தாய் உணர்வின் காரணமாக தீராப்பகை ஏற்பட, இறுதியில் மகாவிஷ்ணு பாம்பை தன் படுக்கையாகவும், கருடனை தன் வாகனமாகவும் ஏற்றருளினார் என்பது புராண வரலாறு

கால சர்ப்ப தோஷம் நீங்கும்:

தோஷங்கள் பல வகை உண்டு. அதில் மிக கடுமையானது கால சர்ப்ப தோஷங்கள். ஜென்ம ஜென்மங்களாக ஒரு ஜாதகருக்கு தொடரும் இந்த தோஷத்தால் அந்த நபருக்கு திருமணத் தடை. குழந்தைப் பேறின்மை, தொழிலில் வீழ்ச்சி, காரியத் தடை, ஆரோக்கிய பிரச்னைகள் என பல சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்கள் ஆடி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய நாக சதுர்த்தி விரதத்தை கடைப்பிடித்து பூஜைகள் செய்ய, முற்பிறவியில் ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்த சர்ப்ப ஹத்யாதி தோஷங்கள் தீர்ந்து சத்புத்திர பிராப்தி கிடைத்திட இந்த விரத பூஜைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

போகர் அருளிய நாக தோஷத்திற்கான மிக எளிய பரிகாரம்:

சதுர்த்தியானது விநாயகருக்கும் உகந்த தினம் என்பதால், நாகசதுர்த்தி தினத்தில், விநாயகர் சேர்ந்த வழிபாடும் இன்றைய தினம் செய்வது மிக சிறப்பான பலனைத் தரும் என்பது நிதர்சனம்.

கருட பஞ்சமி:

ஆடி மாத வளர்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதியில், அதாவது நாக சதுர்த்திக்கு மறுநாள், கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்பட உள்ள விரதமாகும். இந்த நேரத்தில் பெருமாள் ஆலய வழிபாடும், கருட சன்னதியில் விளக்கேற்றி வழிபட ஆயுள், ஆரோக்கியம் கூடும்.

கருட பஞ்சமி வழிபாடு பலன்கள்:

கருட பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட்டால், உடன் பிறந்த சகோதரர்களின் நலன் மேம்படும். விஷ ஜந்துக்களால் ஏற்படக்கூடிய தீங்குகள் ஏற்படாமல் இருக்க பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.