கும்ப ராசிக்காரர்களின் திருமண யோகம்

258

குருபகவான் கும்பம் ராசிக்காரர்களுக்கு 11-வது இடத்துக்கு வந்திருக்கிறார். எனவே இந்த குருபெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்கள் யோகமான பலன்களை பெறுவார்கள்.

கும்ப ராசிகுருபகவான் கும்பம் ராசிக்காரர்களுக்கு 11-வது இடத்துக்கு வந்திருக்கிறார். 11-ம் இடம் என்பது பணவரவு அதிகம் தரும் மிகவும் சிறப்பான இடம் ஆகும். 12 ஆண்டுகள் கழித்து குருபகவான் இந்த லாப ஸ்தானத்துக்கு வந்திருக்கிறார். எனவே இந்த குருபெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்கள் யோகமான பலன்களை பெறுவார்கள்.

சனி, ராகு, கேது ஆகியவையும் இனி சாதகமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் கும்பம் ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்தது எல்லாம் சுலபமாக நடக்கும். குறிப்பாக பல வருடங்களாக தாமதமாகி வந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் மூதாதையர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது சுபகாரியங்களுக்கு கை கொடுப்பதாக அமையும். சிலர் உறவினர்களின் திருமணத்தை முன் நின்று நடத்துவார்கள். குறிப்பாக கும்பம் ராசிப்பெண்கள் தங்களது திறமை வெளிப்படும் வகையில் பெரிய பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றுவார்கள்.

தசாபுத்தி சிறப்பாக இருப்பதால் கும்பம் ராசிக்காரர்கள் சுப நிகழ்ச்சிகளில் எளிதான வெற்றியை பெறுவார்கள். வியாழக் கிழமைகளில் ஏழை-எளியோர்களுக்கு பசியை போக்கும் அன்ன தானம் செய்யுங்கள் அப்படி செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள் கோ-பூஜை நடத்தி தானம் செய்யலாம். குருவின் பார்வை கும்பம் ராசிக்காரர்களுக்கு 5,3,7 ஆகிய இடங்களில் பதிகிறது. இந்த அமைப்புப்படி புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குறிப்பாக குருவின் பார்வை 5-ம் இடத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் திருமண பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது நல்லது. ஸ்ரீரங்கம் தலத்துக்கு சென்று ரங்கநாதரை வழிபட்டுவிட்டு திருமண பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் வெற்றி உறுதி.

குருபகவானின் 7-ம் இடத்து பார்வை காரணமாக பழைய உறவினர்கள் பகையை மறந்து மீண்டும் இணைவார்கள். அது சுபநிகழ்ச்சிக்கான அடிப்படையாக மாறும். ஆனால் பொறுப்புகளை உறவினர்களிடம் ஒப்படைக்க கூடாது. உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குருபெயர்ச்சி காலத்தில் தெய்வ பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். காளி அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சைபழ தீபம் ஏற்றி வழிபட்டால் தெய்வ பலம் அதிகரிக்கும். அதுபோல சஷ்டி நாட்களில் முருகனுக்கும், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது. அந்த வழிபாடுகள் காரணமாக கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துவிடுவீர்கள்.

28.3.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் வக்கிரமாகிறார். இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு கல்யாணம் கைகூடும். இந்த பலனை உறுதிபடுத்திக்கொள்ள பெண்கள் காஞ்சி மாவட்டம் கீழ் படப்பையில் உள்ள ஸ்ரீ வீராட்டேஸ்வரரை வழிபட வேண்டும். பிரதோஷ நாட்களில் அவரை வழிபட்டால் நல்லது. கும்பம் ராசியில் அவிட்டம் (3,4-ம் பாதம்) சதயம், பூரட்டாதி (1,2,3-ம் பாதம்) ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர்-அமிர்தவல்லி தாயாரை வழிபட வேண்டும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர்-ஞானபிரசன்னாம்பிகையை வழிபட வேண்டும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு வழிபாடுகளுக்கு உரிய அனைத்து பலன்களும் கிடைக்கும்.

6.3.2020 முதல் 23.7.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சுவார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். இந்த அங்கீகாரம் காரணமாக உங்கள் மகன் அல்லது மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிலர் தங்கள் சகோதரர்கள் இல்லத் திருமணத்தை முன் நின்று நடத்தும் வாய்ப்பை பெறுவார்கள். மொத்தத்தில் குருபகவான் மகிழ்ச்சியை தரப்போகிறார்.
லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைவதால் பிரச்சினைகள் இருக்காது. குருபார்வையும் சிறப்பாக உள்ளதால் மேன்மை உண்டாகும். 7-ம் வீட்டை பார்க்கும் குரு காரணமாக திருமணம் முதல் பேச்சுவார்த்தையிலேயே சுபமான முடிவுக்கு வந்துவிடும். இதற்கு முருகரையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது நல்லது. தினமும் நவக்கிரக வழிபாடும் நன்மை தரும். மகான்களில் பிருந்தவன தரிசனமும் சிறந்த பரிகாரமாகும். கும்பம் ராசிக்காரர்கள் இந்த குருபெயர்ச்சியில் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபட வேண்டியது அவசியம் ஆகும்.

நமது முன்னோர்கள் “அறம், பொருள், இன்பம், வீடு” என்கிற நியதியை மனிதர் களுக்கு உருவாக்கினர். பூலோகத்தில் இந்த நான்கையும் பெற உதவுபவர் “மகாவிஷ்ணுவான” ஸ்ரீ ரங்க நாதர். புராணங்களின் படி ராவணன் வதத் திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக “ஸ்ரீராமர்” முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார்.

அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீர்த்தத்திற்கு சென்றான் விபீஷணன். விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயக பெருமான்.

பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்பதும் அச்சிலை மிகப்பெரிய அளவில் உருமாறியிருப்பதையும் அறிந்து, அதை அகற்றுவதற்கு முயற்சித் தான். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்த வாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார். அக்காலகட்டத்தில் இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கத் தாருக்கு ஆலயம் எழுப்பினான். 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

“சோழர்கள், பாண்டியர்கள், ஹொய் சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலக அளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில். இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987- ம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. வைணவர்களின் “108 திவ்ய தேசங்களில்” முதன்மையானது இந்த ஸ்ரீரங்கம் கோவில். ஆழ்வார்கள் அனைவராலும் பாடல் பெற்ற கோவில் இது. இக்கோவிலில் தான் திருவில்லிபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான “ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள்.

இந்த கோவிலில் வைணவ சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்க வந்தவரும் ஆதிசேடனின் அவதாரமாக கருதப்படுபவருமான “ஸ்ரீ ராமானுஜர்” தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து நிர்வாகத்தை சீர் செய்தார். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது.

இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது இங்கு தான் “கவிச்சக்ரவத்தி கம்பன்” தன் “கம்பராமாயணத்தை” அரங்கேற்றம் செய்து அந்த” நரசிம்ம மூர்த்தியாலேயே” பாராட்டப்பெற்றார். இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக் கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள்.

எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார். மேலும் நவ கிரகங்களில் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் “சுக்கிரன் பரிகார தலமாகவும்” இக் கோவில் விளங்குகிறது. இங்கிருக்கும் “சக்கரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்கு வதாக கூறப்படுகிறது.

இங்கு வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் திருமண யோகம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை. மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருச்சியிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. கோவில் நடை திறந்திருக்கும் நேரம்-காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் சேர்த்தி வைபவத் தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறு வார்கள். அதாவது ரங்கநாத பெருமாள் – ரங்க நாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டை யிட்டுக்கொள்வதும், பின்னர் இணை வதும் இந்த நாளின் விசேஷம். இந்த வைபவத் தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.