கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

195

கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி என்ற ஊரில் உள்ள கோயில் மாதவி வனேஸ்வரர். இந்தக் கோயிலில் மாதவி வனேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மேலும், உற்சவராகவும் மாதவி வனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மங்காளம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். கோயிலில் முல்லை மரம் தல விருட்சமாக திகழ்கிறது.

கயிலாய மலையைப் போன்று இங்கும் நந்தீஸ்வரர் இருப்பதால் இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் கயிலாயத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.  பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை விஷ்ணு பகவான் தேவர்களுக்கு பகிர்ந்து அளித்தார். அப்போது ஸ்வர்பானு என்ற அசுரன் திருட்டுத்தனமாக தேவர்கள் போன்று வேடமணிந்து அமிர்தத்தை பருகினான்.

இதையறிந்த விஷ்ணு பகவான் அசுரனை இரண்டு துண்டாக வெட்டினார். ஆனால், அசுரன் அமிர்தம் பருகியிருந்த நிலையில், அவனது உயிர் போகவில்லை. இதனால், அசுரனின் தலைப்பகுதியானது ஒரு பாம்புவின் உடலுடன் சேர்ந்து ராகுவாகவும், உடல் பாகம் பாம்பின் தலையோடு சேர்ந்து கேதுவாகவும் மாறின.

இதில் கேது பூலோகத்திலுள்ள மாதவி வனத்தில் தங்கி சிவனை வழிபட்டதன் பலனாக கிரகப் பதவியை அடைந்தது. கேது பகவான் பூஜித்த சிவனே இத்தலத்தில் மூலவராக விளங்குகிறார். கேது தோஷம் நீங்க ஞாயிறன்று ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக செவ்வரளி மாலை சாற்றி 7 முறை சுற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் கேது தோஷ பாதிப்பு நீங்கும் என்பது ஐதீகம்.

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். முல்லை வனமாக காட்சியளித்த இந்தப் பகுதியில் மாலாதரன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான். காட்டில் பூத்த முல்லை பூக்களைத் தொடுத்து மாலையாக்கி தன் கழுத்திலும் மனைவியின் கழுத்திலும் அணிந்து கொள்வான். மறுநாள் இருவரும் அதை வீசி விடுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் வீசிய பூமாலை, இங்கிருந்து சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்தன. அறியாமல் செய்த இப்புண்ணிய பலத்தால் அவர்கள் இருவரும் மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர்.

பிற்காலத்தில் அவர்களே இந்தக் கோயிலைக் கட்டினர். மாதவி (முல்லை) வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு மாதவி வனேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. மங்களாம்பிகை தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.