சந்திர தோஷம் நீங்க மேற்கொள்ள வேண்டிய விரதம்!

100

சந்திர தோஷம் நீங்க மேற்கொள்ள வேண்டிய விரதம்!

மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம் என்று வரிசையாக விஷ்ணு பகவான் மேற்கொண்டது 10 அவதாரங்கள். அதில், ஒன்று தான் வாமன அவதாரம். இந்த அவதாரம் மேற்கொண்டது திருவோண நட்சத்திரம். அதனால், தான் ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திர நாளில் கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது அது திருவோண விரதம். திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரிய நட்சத்திரம். மேலும், இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த விரதம்.

வாழ்வில் ஒருமுறை திருவோண விரதத்தை மேற்கொண்டால் அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட திருவோண விரதத்தை எப்படி முறையாக மேற்கொள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்கள் தான் திரு என்ற அடைமொழியுடன் சிறப்பித்து கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்க்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணமுடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். இதனால், பெருமாள் கோயில்களில் திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

பெருமாளுக்கு பிடித்த திருவோண நட்சத்திர நாளில் விரதத்தை கடைபிடித்து தொடர்ந்து ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் விரதம் மேற்கொண்டு வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். அதோடு, சந்திர தோஷமும் விலகும் என்பது ஐதீகம். சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மன நிலையில் மாற்றம் இருக்கும். எப்போதும் பதற்ற நிலையிலேயே இருப்பார்கள். செய்வது சரியா? தவறா? என்பது கூட சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு தெரியாது.

சந்திர தோஷம் நீங்க ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தோஷம் முற்றிலுமாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வதோடு சந்திர தரிசனமும் மேற்கொண்டால் சந்திரனின் அருள் கிடைக்கும்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். அன்று இரவே பெருமாளின் மந்திரங்களை சொல்லி வர வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து புதிய ஆடையை உடுத்திக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜையறையில் பெருமாள் படத்திற்கு அல்லது பெருமாள் சிலைக்கு துளசி மாளை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பிற்பகலில் சமையல் செய்யும் போது உணவில் உப்பு சேர்த்து கொள்ளக் கூடாது. பூமாதேவிக்கு சமையலில் உப்பு போட்டு சமையல் செய்யத் தெரியாது. இதை ஒரு காரணமாக வைத்து மார்க்கண்டேயர் திருமாலுக்கு உப்பிலியப்பனுக்கு பூமாதேவியை மணமுடித்து தர மறுப்பு தெரிவித்தார். இன்றும் ஒப்பிலியப்பன் கோயில்களில் உப்பு இல்லாத நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ஆகையால் திருவோண விரதம் கடைபிடிக்கும் போது உப்பில்லா சமையல் செய்து அதனை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்வதன் மூலமாக பெருமாளின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரவில் பால் மற்றும் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். காலையில் திருவோண விரதம் மேற்கொள்ளும் போது நோய்கள் அனைத்தும் குணமாகும். பிற்பகலில் வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அனைத்தும் பெருகும். மாலையில் பெருமாள் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அதோடு, 4ஆவது ஜாம பூஜை வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி ஒவ்வொரு மாதமும் அல்லது ஏதாவது ஒரு மாதம் திருவோணம் விரதம் மேற்கொண்டால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.