சனி தோஷம் நீங்க கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் வழிபாடு!

117

சனி தோஷம் நீங்க கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் வழிபாடு!

நாகப்பட்டினம் மாவட்டம் கோழிகுத்தி மயிலாடுதுறை என்ற ஊரில் உள்ள கோயில் வானமுட்டி (வான்முட்டி) பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் வானமுட்டி பெருமாள் மூலவராக காட்சி தருகிறார். உற்சவர் யோகநரசிம்மர். தாயார் மகாலட்சுமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இங்குள்ள பெருமாள் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள், இந்த வானமுட்டி பெருமாளை தரிசனம் செய்து கொள்ளலாம்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், ஹத்தி தோஷம், பிதுர் தோஷம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். காஞ்சி அத்தி வரதர் அத்திமரத்தால் செய்யப்பட்ட சிலா ரூபமாகும். ஆனால் கோழிகுத்தி பெருமாளோ, 1000-ம் ஆண்டு பழமையான வேருடன் கூடிய அத்தி மரத்திலேயே செதுக்கப்பட்ட வடிவமாகும். காஞ்சி அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தரிசிக்க முடியும். ஆனால் இவரை அனுதினமும் தரிசிக்கலாம்.

மேலும் படிக்க: 501, 1001, 10001 என்று ஒற்றைப்படையில் மொய்ப்பணம் வைக்கிறார்கள் தெரியுமா?

இத்தல இறைவனின் பெயர் ‘சீனுவாசப் பெருமாள்’ என்பதாகும். பிப்பிலர் என்ற முனிவருக்கு, வானத்தை முட்டுவதுபோல காட்சி தந்ததால் ‘வானமுட்டி பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ஆலயத்தின் உற்சவரை சபக்தப்ரியன், வரதராஜன் என்று அழைக்கிறார்கள். இறைவியின் பெயர் ‘தயாலட்சுமி.’ இந்த அன்னை மூலவரின் திருமார்பில் இருப்பவர். பூமாதேவி சிலை ரூபமாக காட்சி தருகிறார். கோயில் விமானம் ‘சந்திர விமானம்’ என்றும், தீர்த்தம் ‘விஸ்வ புஷ்கரணி’, ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்றும் வழங்கப்படுகிறது. இத்தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

தல வரலாறு:

பிப்பிலர் என்பவர், முழு நேரமும் இறை சிந்தனையுடன் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த தவச்சீலர் என்றும், முற்பிறவியில் நிர்மலன் என்ற பெயரில் மன்னனாக இருந்து பலரை கொன்றவர் என்றும் சொல்லப் படுகிறது. இவருக்கு, விதிவசத்தால் ஒரு காலகட்டத்தில் சரும நோய் உண்டானது. அதன்பின்னர் அவர் முழுநேரமும் இறை நாட்டத்துடன் வாழத் தொடங்கினார். ஒருநாள் இறைவனை வழிபடும் நேரத்தில் “என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கிறேன். எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை? இதற்குத் தீர்வு தரமாட்டாயா?” என்று மனமுருகி வேண்டினார்.

இதையும் படியுங்கள்: இழந்த செல்வம் திரும்ப கிடைக்க முருகனுக்கு 7 வெள்ளிக்கிழமைகள் விரத வழிபாடு!

பல வைத்தியர்கள் முயன்றும் அவரது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்பதை அறியாத பிப்பிலர், தன் கால் போனப் போக்கில் நடக்கத் தொடங்கினார். சிலநாட்கள் நடந்த பிறகு ஓரிடத்தில் யாழின் இசை ஒலிக்கக் கேட்டு நின்றார். ‘யார் இசைப்பது?, எங்கிருந்து இந்த ஒலி வருகின்றது?’ என்பதை அறிய இசை வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே நாரத முனிவர் தெய்வீக வீணையை வாசித்துக் கொண்டிருந்தார். பிப்பிலர் அவரை வணங்க, நாரதர் அவரை நிமிர்ந்துப் பார்த்தார். பிப்பிலரின் நோய் தாக்கத்தை கண்டு மனம் இரங்கிய நாரதர், அவருக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்து, அதை தினந்தோறும் பாராயணம் செய்து வரும்படி கூறினார். பிப்பிலரும் அப்படியேச் செய்தார்.

நாரதர் கூறிய மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய நாராயணர், “பிப்பிலரே! போன ஜென்மத்தில் நீர் அரசனாக இருந்து பலரை ஹத்தி (கொலை) செய்திருக்கிறாய். அதன் பலனாகத்தான் இந்த சரும நோய், உன் உடலில் தங்கி உன்னை வேதனைப்படுத்துகிறது. அந்தப் பாவ தோஷம் நீங்க வேண்டுமானால், காவிரிக் கரையோரம் உன் யாத்திரையைத் தொடங்கு. புண்ணாக வனம் எனப்படும் திருமூவரூரில் (மூவலூரில்) எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். வழிபாட்டுக்குப்பின் சரும நோய் நீங்கி பொன் உடல் பெறுவாய்” என்று அருளி மறைந்தார்.

இங்கேயும் கிளிக் செய்யுங்கள்: முளைப்பாரி ஏன், எதற்காக போடுகிறார்கள் தெரியுமா?

அதன்படி காவிரிக் கரையோரம் தனது யாத்திரையைத் தொடங்கிய பிப்பிலர், வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார். மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார். இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், ‘‘பிப்பிலரே! வடக்கு நோக்கிச் செல். உன் கவலை தீரும்!’’ என்றார்.

பிப்பிலரும் அப்படியே வடக்கு நோக்கிச் சென்று காவிரி ஆற்றில் பகவானைப் பிரார்த்தித்தபடி நீராடினார். அடுத்தவினாடியே அவர் உடலில் சிறிய மாற்றம் ஏற்படத் தொடங்கிற்று. அந்த மகிழ்ச்சியில் ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த, அவர் கால்கள் வடதிசையை நோக்கி அவரையும் அறியாமல் நடக்கத் தொடங்கின. ஓரிடத்தில் பெரிய அத்திமரம் தென்பட்டது. அந்த அத்திமரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் நாராயணர் காட்சி தர, அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பானது வானத்தை முட்டினாற்போல் விண்ணும் மண்ணும் நிறைய நின்றது.

மேலும் படிக்க: சனிபகவானுக்கு இருக்க வேண்டிய விரதங்கள்!

பிப்பிலரின் உடல் சிலிர்த்து அடங்கியது. அவரது உடலை பற்றியிருந்த சரும வியாதி சிறிது சிறிதாக குறைந்து, முற்றிலுமாக மறைந்து தங்க மயமாக ஜொலித்தது. சரும நோயில் இருந்து விடுபட்ட பிப் பிலர், காவிரிக் கரையிலேயே, ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரை ஓரத்தில் இன்றும் உள்ளது. பிப்பிலர் நீராடிய காவிரி தீர்த்த கட்டத்தை ‘பிப்பில மகரிஷி தீர்த்த கட்டம்’ என்று அழைக்கிறார்கள். இங்கு நீராடினால், வானமுட்டிப் பெருமாளின் அருளால் மெய்ப் பிணி, பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள்.

பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் நிவாரணம் செய்ததால் இத்தலம் ‘கோடிஹத்தி’ எனவும், ‘பாப விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயரே நாளடைவில் மருவி, ‘கோழிகுத்தி’ என்றானது. வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், ஒருநாள் கோழிகுத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும் என இத்தல இறைவனை வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல், சரபோஜி மகாராஜாவுக்கும் அத்தி மரத்தில் வானளாவிய காட்சி தந்து, தோஷத்தை நீக்கியருளினார், பெருமாள்.

இதனால் மகிழ்ந்த மன்னன், தான் கண்ட காட்சியை அனைவரும் காண வேண்டும் என்று எண்ணி, பெருமாளின் திருக்கோலத்தை, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு:

இந்துசமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். அதன் கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி விட்டு கடந்தால், பலிபீடம், கொடிமரத்தை தரிசிக்கலாம். பின்னர் விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். தொடர்ந்து கருடாழ்வாரை தரிசித்து, உள் மண்டபத்தில் நுழையலாம். அங்கே கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டிப் பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.

ஒரே ஒரு பிரகாரம்தான் இருக்கிறது. பிரகலாதனுக்கு அருள் செய்த நரசிம்ம மூர்த்திதான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். யோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு – சக்கரம் ஏந்தி அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர். கிரகக் கோளாறுகள், பகைவர்கள் தொல்லை, கடன் தொல்லை, வியாதிகளில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் போதும். பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அங்காரக தோஷம் நிவர்த்தியாகும். மன நிம்மதி ஏற்படும்.

உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளை வழிபாடு செய்யலாம். உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறு அருள்கின்றனர். நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறு அருள்புரிகின்றார். அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும், வருண மூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள்.

வெளிப்பிரகாரத்தின் வடதிசையில் தெற்குநோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி ஆகியோர் அருள்புரிகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம், பெருமாள் தியான ஸ்லோகம் ஆகியவை ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன. ஈசான்ய திசையில் மேற்கு நோக்கி தனிச்சன்னிதி கொண்டு ‘சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயர்’ அருள் புரிகிறார். இவர் ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவர்.

சாதாரணமாக எல்லா கோவிலிலும் சன்னிதியின் மூன்று பக்கங்கள் மூடியும், மூர்த்தம் பார்க்கும் பக்கம் மட்டும் திறந்தும் இருக்கும். ஆனால் இங்கு ஆஞ்சநேயரின் பின் பக்கத்தை பக்தர்கள் தரிசிக்க வசதியாக பின்புறமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் வால், தலை வரை உயர்ந்து, நுனி கொஞ்சம் வளைந்து நுனியில் மணியுடன் காணப்படுகிறது. சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற இவரை ஏராளமானோர் தரிசிக்கின்றனர்.

இத்தல இறைவனை வழிபட்டால், பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாளை தரிசனம் செய்தால், திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்:

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 4 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்வதற்கு, மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது. இந்த ஆலயம் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்திலிருந்து வடக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

பெருமாளுக்கு அபிஷேகம் இல்லை:

பெருமாளின் வலது மார்பில் தயாலட்சுமி தாயார் உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருக்கிறது. மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது. இத்தல மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.

இன்றுவரை காயாமல், வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன், அருகில் பூமாதேவி சிலாரூபத்துடன் அருளும் வானமுட்டி பெருமாளின் வடிவழகை பார்க்கும்போது மெய்மறந்து வணங்கத் தோன்றும். இந்தப் பெருமாள் வளர்ந்து கொண்டே செல்வதால் அவர் மேலும் வளராமல் இருக்க தானியம் அளக்கும் மரக்காலை கிரீடம் போன்று திருமுடியில் சாத்தி இருக்கிறார்கள். கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் அத்தி மரத்தில் எழுந்தருளியிருப்பதால், கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. தாயாருக்கெனத் தனி சன்னிதி இல்லை.