சாபம்- தோஷம் போக்கும் மகாளய அமாவாசை

273

இறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

மகாளய அமாவாசை தர்ப்பணம்ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசி சக்கரத்தின் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. நம்முடைய மறைந்த முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர்.

புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவார்கள். இதையே, ‘மகாளய பட்சம்’ என்பர். ‘பட்சம்’ என்றால், ‘15 நாட்கள்’ எனப் பொருள். ‘மகாளயம்’ என்றால் ‘கூட்டமாக வருதல்’ என்று அர்த்தம். மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாட்களையே ‘மகாளய பட்சம்’ என்கிறோம். (சில சமயங்களில் 16 நாளாக மாறுபடும்).

இந்த கால கட்டங்களில் முன்னோர்களை வழிபட்டால், சகல பாவங்களிலும் இருந்து விமோசனம் கிடைக்கும். அதன் காரணமாகவும் இதற்கு மகா- ளயம் என்று பெயர். இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து இறைவனை அடைந்து பிறவா நிலையை அடையச் செய்வது அவர்களின் வாரிசுகளுடைய கடமை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆத்மாவின் நோக்கமாக இருக்கும். பூமியில் வாழும் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு இன்றி அவர்களுடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தங்களால் இயன்ற முன்னோர் வழிபாட்டை செய்ய வேண்டும்.

முறையான முன்னோர் வழிபாடே இறந்தவர்களின் ஆத்மாவை பிறவா நிலைக்கு அழைத்து செல்லும். வாரிசுகளின் உதவியின்றி ஆத்மா சாந்தியடைவது எளிதல்ல. ஒரு ஆத்மாவை சாந்தியடையச் செய்ய உதவுபவர்களுக்கே புண்ணிய பலன் மிகும். ஒருவர் சிரமம் இன்றி வாழ்கிறார் என்றால் முன்னோர் வழிபாட்டை முறையாக செய்பவர் என பொருள். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும்.

அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும். அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

‘தர்ப்பணம்’ என்ற சொல்லுக்கு ‘திருப்திப்படுத்துதல்’ என்று பொருள். பித்ருக்கள் தர்ப்பணம் செய்யும் போது தர்ப்பையின் மேல் விடும் எள்ளும், அரிசியும், நீரும் பல நாட்கள் உட்கொள்ளக் கூடிய உணவாகும். அதனால் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

முன்னோர்களின் பசி, தாகத்தை தீர்க்கக் கூடிய புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளை (சனிக்கிழமை) வருகிறது. அன்று அமாவாசை தர்பணங்களை செய்ய வேண்டும். எல்லா கிழமைகளிலும் வரும் அமாவாசையை விட சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தர்ப்பணத்திற்கு வலிமை அதிகம்.

தர்ப்பணத்தின் மூலம் பசி தாகத்தை தீர்க்காதவர்களை, முன்னோர்களின் ஆன்மா சாபம் இட்டுச் செல்லும். இது வருடக்கணக்கில், தலைமுறையாக தொடரும்போது ஜாதகத்தில் கடுமையான தோஷமாக பிரதிபலிக்கும்.

அது குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் – மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை, வறுமை, திருமணத் தடை ஏற்படுத்தும்.

கடுமையான பித்ரு தோஷத்தை தில ஹோமம், தர்ப்பணம், அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்க முடியும். ஒவ்வொரு மாதம் அமாவாசை வழிபாடு, அன்னதானம் செய்ய முடியாதவா்கள் புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளுக்கு அன்னதானம், தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். இறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். புண்ணியத் தலங்களில் கடலில் அல்லது நதியில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை, வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளித்தால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

ஆண் வாரிசு இன்றி பெற்றோருக்கு திதி கொடுக்க முடியாத பெண்கள், அருகில் உள்ள சிவன் கோவிலில் மோட்ச தீபம் இட்டு ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்யலாம். தர்ப்பணத்தின் போது மூன்று தலை முறை முன்னோர்களின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். இறந்த முன்னோர்களில் பெற்றோர்கள் வசுக்களாகவும், தாத்தா – பாட்டி (பெற்றோர்களின் பெற்றோர்கள்) ருத்திரர்களாகவும், கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி (தாத்தாவின் பெற்றோர்கள்) ஆதித்யர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் வழிபட்டு பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

தந்தை வழி மூதாதையர் 6 பேர், தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பித்ரு வர்க்கம் என்பது ஆண்கள் வழியில் தந்தை, தாத்தா (தந்தையின் தந்தை), தாத்தாவின் தந்தை. பெண்கள் வழியில் தாயார், தந்தையின் தாயார், கொள்ளுபாட்டி (தந்தையின் பாட்டி). மாத்ரு வர்க்கம் என்பது ஆண்கள் வழியில் தாத்தா (தாயின் தந்தை), தாயின் தந்தையின் தந்தை, தாயின் தாத்தாவின் தந்தை. பெண்கள் வழியில் பாட்டி (தாயின் தாயார்), தாயின் பாட்டி, தாயின் கொள்ளுப் பாட்டி ஆகியோர்.

இவர்கள் 12 பேர் தவிர, சாந்தியடைய சிரமப்படும் ஆத்மாக்களான மனைவி, மகன் மற்றும் மகள் (18 வயதிற்கு மேல்), தாயின் சகோதர-சகோதரிகள் (அத்தை, பெரியப்பா, சித்தப்பா), தந்தையின் சசோதரரின் மனைவி (பெரியம்மா, சின்னம்மா), உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் (அண்ணன், தம்பி, அக்கா, தங்கை), தாயின் சகோதர-சகோதரிகள் (மாமா, பெரியம்மா, சித்தி), தந்தை, தாத்த போன்றவர்களின் மூத்த, இளைய தார மனைவிகள் ஆகியோரது ஆத்மாவும் சாந்தியடைய உதவி செய்யும் விதமாக தர்ப்பணம் செய்வது ஒருவரின் கடமையாகும். பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும்.