சிம்ம ராசிக்காரர்களின் திருமண யோகம்

289

தற்போதைய குரு பெயர்ச்சியில் குரு பகவான் சிம்ம ராசியில் 5-ம் இடத்துக்கு வந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியில் நிச்சயமாக திருமணம் கைகூடி மிக மிக சிறப்பாக நடைபெறும்.

சிம்மம்தற்போதைய குரு பெயர்ச்சியில் குரு பகவான் சிம்ம ராசியில் 5-ம் இடத்துக்கு வந்துள்ளார். 5-ம் இடம் என்பது நல்ல தெளிவான உறுதியான முடிவுகள் எடுப்பதற்கு துணை நிற்கும் அம்சமாகும். எனவே இந்த கால கட்டத்தில் அந்த முடிவுகள் புதிய உறவுகளை தேடித்தரும். அது சுப காரியமாகவும் மாற வாய்ப்புள்ளது.

மேலும் சிம்ம ராசியில் குரு பலம் பெறுகிறார். எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் நிச்சயமாக திருமணம் கைகூடி மிக மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல குழந்தை பாக்கியம் இல்லாத சிம்ம ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிம்ம ராசி பெண்கள் தற்போதைய கிரக அமைப்புகளின் படி முக்கிய பிரச்சினைகளை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இதில் மட்டும் கவனமாக இருந்தால் சுப காரியங்கள் நடக்கும்போது மிக எளிதாக நடத்த வாய்ப்பு ஏற்படும். ஆகையால் முக்கிய பிரச்சினைகளில் சிம்ம ராசி பெண்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது ராகுவும் வெற்றி தரும் இடத்தில் இருக்கிறார். எனவே குருவுடன் ராகுவையும் வழிபடுங்கள். சூரியனின் கருணையை பெற்றால் சுப காரியத்துக்கு மிக உதவியாக இருக்கும். எனவே சிம்ம ராசி பெண்கள் இந்த குரு பெயர்ச்சி நாட்களில் தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது பலன்களை அதிகரிக்க செய்யும். ஆதித்ய கிருதயம் படித்தால் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

ஞாயிறு சிறப்பு மிக்க தலங்களுக்கு சென்று வழிபடலாம். சென்னையில் இருப்பவர்கள் புழல் அருகே உள்ள ஞாயிறு தலத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. சரபேஸ்வரரையும் சிம்ம ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டும். சமீப காலமாக சிவாலயங்களில் ஞாயிறு தோறும் ராகு கால நேரத்தில் சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பு பெற்று வருகிறது. கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் உடனே கைகூடும்.

தற்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு முதலில் தனுசு ராசியிலும் பிறகு பூராடம் நட்சத்திரத்திலும் வக்கிரம் அடைய உள்ளார். தனுசு ராசியில் ஏற்கனவே சனி பகவான் உள்ளார். குரு அங்கு செல்வதால் இருவரும் வீடுகளை மாற்றிக் கொள்வார்கள். இந்த பரிவர்த்தனை யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடும். குடும்பத்தில் நிச்சயமாக சுப காரியங்கள் நடத்த வேண்டிய பாக்கியத்தை இந்த அமைப்பு பெற்றுக் கொடுக்கிறது. இந்த பாக்கியத்தை பெற குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பார்வை 1, 9, 11 இடங்களில் வருகிறது. பெருமாளை வழிபட்டால் இந்த குரு பார்வைக்குரிய பலன்களை நூறு சதவீதம் பெற முடியும். திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்ம பெருமாளை சனிக்கிழமைகளில் வழிபட்டு பாசி பருப்பை தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும். அதாவது குரு பார்வையின்படி பதினொன்றை குரு பார்த்தால் பண தேவை பூர்த்தியாகும் என்பார்கள். பெருமாள் வழிபாடு பண வரவை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும். அது சுப காரியங்களுக்கு உதவியாக அமையும்.

வியாழக்கிழமை விரதமும் நன்மை தரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருச்செந்தூரில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கெட்டிமேளம் கொட்டும் சத்தத்தை கேட்கலாம். ஏகாதசி தினத்தில் வரதபெருமாளை வழிபடுவதும், சனி அன்று சனீஸ்வரரை வழிபடுவதும், பிரதோஷ தினத்தன்று நந்தியை வழிபடுவதும் நல்ல பலன்களை தரும். கரூர் மாவட்டம் பாளையம் எனும் ஊரில் உள்ள கதிர் நரசிம்ம பெருமாளை வழிபடலாம்.

குரு பகவான் ஜென்ம ராசியில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்று மடங்கு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிம்மம் ராசியில் மகம், பூரம், உத்திரம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. மகம் நட்சத்திரக்காரர்கள் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஆட்சிபுரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த ஆண்டாளை வணங்கினால் அவள் சுபகாரியங்களுக்கு உதவுவாள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமலை அம்மனையும் மனதார வழிபட்டால் மங்கலம் பெருகும். என்றாலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஞாயிறு ஆலய வழிபாடும், சரபேஸ்வரர் வழிபாடும் உடனடி பலன் தரும் என்று கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள் தர முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட உகந்த நேரம் ராகு காலமாகும். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு உண்டு. விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேஸ்வரருக்கு மட்டுமே உ ண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி,சூனிய ஓழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. மேலும் இவரை “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். இவரை மனம் உருகி வழிபட்டால் திருமணம் உடனடியாக நடைபெறும்.

அதுபோல திருமணயோகம் தரும் தலமாக சென்னை செங்குன்றம் அருகே உள்ள ஞாயிறு ஆலயம் உள்ளது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் புஷ்பரதேஸ்வரர் என்கிற பெயரிலும், உற்சவர் சோமாஸ்கந்தர் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். அம்பாள் சுவர்ணாம்பிகை, பாலசுகாம்பிகை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். கோயில் தல விருட்சமாக நாகலிங்க மரம் இருக்கிறது. கோயில் தீர்த்தங்கள் சந்திர புஷ்கரிணி, சிம்ம தீர்த்தம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தல புராணங்களின் படி தேவலோக சிற்பி விஸ்வகர்மா மகளான சமுக்ஞாவை திருமணம் செய்து கொண்டார் சூரியன். நாள்பட சூரியனின் வெப்பம் தன்னால் தாங்க முடியாமல் போக தனது நிழலையே உருவமாக செய்து கணவனிடம் விட்டு சென்று விட்டாள் சமுக்ஞா. இதையறிந்த சூரியன் தனது மனைவியை திரும்ப அழைத்து வர சென்ற போது சிவபூஜை செய்தார்.

அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றியது, அதை பின்தொடர்ந்து சூரியன் சென்ற போது அது ஒரு தாமரை தடாகத்தில் சென்று ஒரு தாமரை பூவில் சென்று ஐக்கியம் ஆனது. சிவன் அந்த தாமரை மலரிலிருந்து தோன்றிய சிவபெருமான் சூரியன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழும் படியாக அருள்புரிந்தார். சூரியனின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். சூரியன் பூஜை செய்த லிங்கம் தாமரை தடாகத்தில் உள்ளேயே இருந்தது, பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த சோழ மன்னன் ஒருவன், மின்னிக்கொண்டிருக்கும் அந்த தாமரை மலரை பறிக்க முயற்சித்தான்.

ஆனால் அந்த தாமரை மலர் நகர்ந்து சென்றதே தவிர கையில் சிக்கவில்லை, இதனால் பொறுமை இழந்த மன்னன் அந்த தாமரை மலரை வெட்டிய போது ரத்தம் பீறிட்டது. இதை கண்ட மன்னனின் பார்வை உடனே பறிபோனது. பிறகு சிவபெருமானிடம் மனமுருக வேண்டிய மன்னனின் முன்பு தோன்றிய சிவபெருமான் மன்னனுக்கு பார்வை வரத்தை அளித்ததோடு, அந்த தடாகத்திலேயே தான் இருப்பதாக கூறினார்.

பின்பு அந்த சோழ மன்னன் அங்கு அழகிய ஆலயத்தை நிர்மாணித்து, அங்கேயே லிங்க பிரதிஷ்டை செய்தான். புஷ்பத்தில் லிங்கமாக சிவபெருமான் இருந்ததால் புஷ்பரதேஸ்வரர் கோயில் என பெயர் பெற்றது. இக்கோயிலில் மூலஸ்தானத்திற்கு முன்பாக சூரியன், புஷ்பரதேஸ்வரர் சந்நிதியை பார்த்தவாறு இருக்கிறார். இவர் இங்கு சிவபெருமானை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

–– ADVERTISEMENT ––

சித்திரை மாத பிறப்பின் போது முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சுவர்ணாம்பிகை ஆகியோர் மீது சூரிய ஒளி படுகிறது. இக்காலத்தில் சூரியன் இவர்கள் இரு வருக்கும் பூஜைகள் செய்வதாக ஐதீகம். எனவே அந்த தினத்தில் சிவனுக்கு உச்சி கால பூஜைகள் செய்வதில்லை. மகர சங்கிராந்தி தினமான தை பொங் கல் தினத்தில் சூரியனுக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சூரியன் நவகிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. மற்ற கிரகங்களுக்குரிய கிழமைகளில் அந்த கிரகங்களின் தோஷம் நீங்க சிவப்பு நிற வஸ்திரங்களை சாற்றி, கோதுமை மாவு, நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவார்கள்.