சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய கோயில்!

140

சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் என்ற ஊரில் உள்ளது பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக பிரம்ம சிரகண்டீஸ்வரர் காட்சி தருகிறார். தாயார், மங்களநாயகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மாவுக்கு என்று தனியாக இங்கு கோயில் உள்ளது. சரஸ்வதி தேவி தனது கணவர் பிரம்மாவோடு அடக்கமாக, 4 கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்து ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். பிரம்மாவின் படைப்பில் தனது சக்தியை செலுத்தி கலைச் செல்வத்தை வாரி வழங்கும் நாயகியாக வெள்ளாடை நாயகி சரஸ்வதி தேவி திகழ்கிறாள்.

ஐந்து தலைகள் கொண்ட தான் தான் பெரியவன், உயர்ந்தவன் என்ற ஆணவம் கொண்ட பிரம்மாவின் தலையை கொய்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக கையில் கபாலம் ஒட்டிக் கொள்ள சாப்பாட்டிற்காக பிச்சையெடுத்த சிவபெருமானுக்கு அந்த பிரம்மஹத்தி தோஷத்த பிரம்ம சிரகண்டீஸ்வரர் நீக்கி அருள் புரிந்தார். இந்தக் கோயிலில் கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கு தனியாக சன்னதியும் அமைந்துள்ளது.

தல வரலாறு:

பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண் மீது ஆசை கொண்டார். உடனே அந்தப் பெண் அம்பாளிடம் சென்று நடந்தது குறித்து முறையிட்டார். இதற்கு அம்பாள், சிவபெருமானிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பிரம்மாவின் ஒரு தலையை நகம் கொண்டு கொய்ததால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது.

தனது தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். பிரம்மனின் தவம் கண்டு மனமகிழ்ந்த சிவபெருமன், அவரது தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால், இத்தல இறைவனுக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி தோஷம்:

பிரம்மதேவரின் தலையை துண்டித்த சிவபெருமானின் கையில் பிரம்மனின் தலை அப்படியே ஒட்டிக் கொண்டு அது பிரம்மஹத்தி தோஷமானது. பைரவரை பார்த்து, இந்த தீவினை தீர நீயும் பிச்சை எடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறினார். இதன் காரணமாக பைரவர் சிவன் கோயில்களுக்கு சென்று பிச்சைக் எடுத்து வந்தார்.

அப்படி பைரவர் இந்த கண்டியூருக்கு வந்து இந்தக் கோயிலை அடைந்தவுடன் சிவபெருமானின் கையில் ஒட்டியிருந்த தலையானது அவரது கையை விட்டுப் போனது. அதோடு, சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.

பிரம்மனுக்கு தனிக் கோயில்:

எவர் ஒருவர் ஆணவத்தோடு இருக்கிறாரோ அவர் கண்டிப்பாக அழிவர் என்ற உண்மையை உணர்த்தும் சம்பவம் நடந்த இடம் தான் கண்டியூர். எந்தக் கோயிலிலும் பிரம்ம தேவனுக்கு தனியாக கோயில் கிடையாது. அப்படியிருக்கும் போது இந்தக் கோயிலில் மட்டும் பிரம்ம தேவனுக்கு தனியாக கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் பிரம்மன் தனது மனைவி சரஸ்வதியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். மேலும், பிரம்மன் தனது தவறை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலையை ஏந்திக் கொண்டு இரு கைகளும் வேண்டுகின்ற அமைப்பில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன், காத்தல் தொழில் புரியும் விஷ்ணு பகவான் மற்றும் அழித்தல் தொழில் புரியும் சிவபெருமான் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக கோயில்கள் உள்ள தலம் தான் இந்த கண்டியூர். நவக்கிரகத்தில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றியிருக்கிறார். மற்ற கிரகங்கள் சூரியனை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. தவறு செய்துவிட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிறு கட்டு இந்தக் கோயிலில் உள்ள பிரம்ம சிரகண்டீஸ்வரரை வழிபட எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.