செவ்வாய் தோஷம் நீங்க எல்க் மலை முருகன் வழிபாடு!

105

செவ்வாய் தோஷம் நீங்க எல்க் மலை முருகன் வழிபாடு!

நீலகிரி மாவட்டம் எல்க் மலை என்ற ஊரில் உள்ள கோயில் பாலதண்டாயுதபாணி கோயில். இந்த திருக்கோயிலில் பாலதண்டாயுதபாணி மூலவராக காட்சி தருகிறார். ஜலகண்டீஸ்வரி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இந்த ஊருக்கு மான்குன்றம் என்பதே புராண பெயராக இருந்துள்ளது.

கிருத்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தைப்பூசம் 10 நாட்கள் விழாவாகவும், பங்குனி உத்திரம் தேர்த்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மலைப்பிரதேசத்தில் ஏற்ற இறக்கத்தில் தேரினை கட்டுப்படுத்த முடியாது என்பதால் தேரினை டிராக்டரில் பூட்டி தேரோட்டம் நடத்துகின்றனர்.

நாற்பது அடி உயரமுள்ள முருகன் சிலையை கோயிலின் இடதுபுறம் காணலாம். இந்தியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை இதுதான். இதன் அமைப்பு 10 தலை முருகன் சிலையைப் போன்று உள்ளது. கோயிலில் படியின் முடிவில் 3 நிலை ராஜகோபுரம் உள்ளது. இதையடுத்து கொடிமரம், அர்த்தமண்டபம் கடந்து பாறையையொட்டி கருவறை அமைந்துள்ளது.

கோயில் கருவறையில் பாலதண்டாயுதபாணி தலையில் அக்கமாலையும் இடக்கையில் தண்டமும் ஏந்தியுள்ளார். முருகனுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதை போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படுகிறது. அருகில் நாராயணதீர்த்தம் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட புஜ துர்க்கை, ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள மூலவரான முருகப் பெருமானை மனமுருகி வேண்டிக் கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கி கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

மேலும், இந்தக் கோயில் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும், இயற்கை அழகாலும் தூய்மையான காற்றாலும் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மூச்சுத் திணறல், ரத்தக் கொதிப்பு, கை, கால் மூட்டு வலி ஆகிய உடல் நல பிரச்சனைகளும் குணமடைவதாகவும் கூறப்படுகிறது.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவற்றை செய்து நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலில் தோன்றிய கோயில் இது. மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்திற்கு கூடுதல் சிறப்பு. முருகப் பெருமான் இருக்கும் இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம். 7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோயில் இது.

குன்றின் மீது உள்ள கோயிலை அடைய முன்பு சரிவான மேட்டுச்சாலையில் ஏறிச் செல்ல வேண்டும். முருகப் பெருமானை படியேறிச் சென்று தரிசிப்பது சிறப்பன்றோ! அதனால் 108 படிகளுடன் 5 மண்டபங்களையும் அமைத்துள்ளனர். நாராயண தீர்த்தத்திலிருந்து எடுக்கப்படும் நீர்தான் முருகனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பழங்காலத்தில் இந்தப் பகுதியில் இருவர் இணைபிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். பழநி முருகப் பெருமான் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருநாளன்று பழநிக்கு பாத யாத்திரையாக சென்று முருகப் பெருமானை தரிசித்து வருவது வழக்கம்.

ஒருநாள் உடல்நலக் குறைவால் அவர்களால் தைப்பூச திருநாளன்று பழநிக்கு சென்று முருகப் பெருமானை தரிசிக்க முடியவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்தினர். அன்று இரவு முருகப் பெருமான் அவர்களது கனவில் தோன்றி அருகி  லுள்ள குன்றில் தான் உறைவதாகவும், அங்கேயே கோயில் கட்டி தன்னை வழிபடுமாறும் கூறினார்.

கனவில் வந்த முருகப் பெருமான் குறிப்பிட்ட இடம் எல்க் எனும் ஒருவகை மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்த குன்றுப் பகுதி. அதனால், இந்தப் பகுதி எல்க் ஹில்ஸ் அல்லது எல்க் மலை என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இந்த இருவரது உதவியுடன் இந்தக் கோயில் உருவாகியதாக சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருமேனி சிறப்புகளை அறிந்த நிலம்பூர் மகாராஜா கோயில்களுக்கு தேவையான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அமைந்த முதல் முருகன் கோயில் என்ற பெருமை இந்தக் கோயிலுக்கு உண்டு. அங்குள்ள பழங்குடியின மக்கள் முருகப் பெருமானை குல தெய்வமாக வணங்குகின்றனர்.