செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருபனந்தாள் அருணஜுடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும்.
தலச்சிறப்பு:
மூலவருக்கு அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் என்று பெயர். அம்பாள் பெரிய நாயகி. இங்கு தல விருட்சமாக பனைமரம் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இக்கோவிலில் விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம். கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது. கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.
தாலவனேஸ்வரர்:
இவ்வாலயம் பனைமரத்தை தலவிருட்சமாக கொண்டு விளங்குவதால் திருப்பனந்தாள் ஆயிற்று. இன்றும் ஆலய பிரகாரத்தில் இரு ஆண் பனை தெய்வீக தன்மையுடன் உள்ளது. தாலம் என்றால் பனை. பனை வனத்தில் வீற்றிருக்கும் ஈசன் தாலவனேஸ்வரர் ஆனார். ஈஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளி இருக்கிறார்கள். இவ்வாலயம் திருமணத்தடை குழந்தை இன்மைக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
புராண கதை:
தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோரும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குணிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது.
அப்போதய மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனாரி இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார்.
மிக எளிதாக தலை நிமிர்ந்தது என்று திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. தடாகைக்காக தலை சாய்ந்ததும் குங்கிலியக்கலய நாயனாருக்காக தலை நிமிர்ந்ததும் இவ்வாலயத்தில் சிற்ப வடிவில் உள்ளது. ஸ்ரீகுமரகுருசாமிகள் நிறுவிய காசிமடம் இங்குதான் உள்ளது. பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிஷேசன், நாககன்னிகை போன்றோர் வழிபட்ட தலம்.
பிரார்த்தனை:
சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.