செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

112

செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி ஜாதகத்தில் கட்ட என்ன சொல்கிறதோ அதன்படி தான் அவர்களுக்கு பலன்கள் நடக்கும். ஒவ்வொருவருக்கும் ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்படுவது உண்டு. குறிப்பாக, நாக தோஷம், செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற நவக்கிரகங்களாலும் தோஷங்கள் ஏற்படும்.

இந்த தோஷங்கள் நீங்க அதற்குரிய பரிகாரங்களை செய்து வழிபடுவது சிறப்பு. அதன்படி, இந்தப் பதிவில் நாம், செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து காண்போம்.

பொதுவாக நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றது. இந்த செவ்வாய் பகவான் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து அல்லது சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிற்கு 2, 4, 6, 7, 8 மற்றும் 12 ஆகிய பாவங்களில் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு செவ்வாய் தோஷம் என்று கூறப்படுகிறது.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், செவ்வாய் திசை, புத்தி காலங்களில் செவ்வாய் தோறும் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு செண்பக மலர் கொண்டு அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியமாக படைத்து, செவ்வாய் காயத்ரி மந்திரம் சொல்லி முருகப் பெருமானை வழிபட வேண்டும். இதன் மூலம் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.