ஜென்ம ஜென்மமாக செய்த பாவங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

54

ஜென்ம ஜென்மமாக செய்த பாவங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஜென்ம ஜென்மமாக பல தலைமுறைகளைக் கடந்தும் சில பாவம் நம் குடும்பத்திற்கு தொடர்ந்து வரும். கஷ்டங்களில் இருந்து மீள முடியாமல் பல தலைமுறைகளாக போராடி வருவார்கள். ஜாதகத்தை பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சாபம், ஏதோ ஒரு பாவக்கணக்கு பின் தொடர்கிறது என்று சொல்லுவார்கள். பரிகாரங்கள் நிறைய செய்திருப்போம். நிறைய காசு பணம் கூட செலவு செய்து இருப்போம். ஆனால் பலன் இருக்காது.

குடும்பத்தில் கஷ்டம், சிலருக்கு பணரீதியாக கஷ்டம் இருக்கும். சிலருக்கு மனரீதியாக கஷ்டம் இருக்கும். நிம்மதியான வாழ்க்கை இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண என்ன செய்வது. ஒரு குடும்பத்தால் தலை தூக்கவே முடியவில்லை எனும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் விடாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாக வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது என்று சொல்லுவார்கள்.

இருப்பினும் தொடர்ந்து அடி மேல் அடி விழும் குடும்பமாக இருந்தால் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். இது தவிர வீட்டில் இருக்கும் பெண்கள் தினம் தோறும் குல தெய்வத்தை நினைத்து மனதார வேண்டி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுதான் முதல் வழி.இது தவிர இன்னொரு பரிகாரம் உள்ளது. இது ஒரு சுலபமான வழிபாட்டு முறை தான்.

பொதுவாகவே இயற்கையான மூலிகைச் செடிகளுக்கு அபரிவிதமான சக்தி உண்டு. சில கடவுள்களுக்கு சில இலைகளை சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்கின்றோம். உதாரணத்திற்கு விநாயகருக்கு அருகம்புல், விஷ்ணுவுக்கு துளசி, சிவபெருமானுக்கு வில்வம், அம்பாளுக்கு வேப்பிலை, இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு இலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த இலைகளை வைத்து தான் இன்றைக்கான பரிகாரத்தை பார்க்க போகின்றோம்.

மொத்தமாக ஐந்து இலைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். துளசி, வில்வம், வேப்ப இலை, அருகம்புல், அரச இலை. அரச இலையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்வதாக ஐதீகம். இந்த ஐந்து இலைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் கிடைத்தால் கூட போதும். கொண்டு வந்த இலைகளை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு ஒரு தாம்பூல தட்டில் நன்றாக பரப்பி வைத்து விட்டு அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள்.

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து மனதார இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். தெய்வ குத்தமாக இருந்தாலும், நம் முன்னோர்கள் செய்த பாவமாக இருந்தாலும், முன்னோர்கள் நமக்கு கொடுத்த சாபமாக இருந்தாலும், நாம் செய்த பாவத்தையும் சேர்த்து, எங்களுடைய குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைய வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவசரம் அவசரமாக இந்த பூஜையை செய்யக்கூடாது.

நிதானமாக ஒரு 15 நிமிடமாவது அந்த விளக்கின் முன்பு அமர்ந்து வேண்டுதல் வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி இந்த வேண்டுதலை வைத்தால் அதற்கான பலன் இரட்டிப்பாக உடனடியாக கிடைக்கும். இந்த இலைகளுக்கு உள்ள மகிமை, ஒட்டுமொத்த நேர்மறை ஆற்றலும் ஒன்றாக கூடி உங்கள் வேண்டுதலை காதில் கேட்டு ஆசிர்வாதம் செய்யும்போது, நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் தீருவதற்கு ஏதாவது ஒரு வகையில் வழி கிடைக்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. தொடர்ந்து ஐந்து அமாவாசைகள் இப்படி செய்ய வேண்டும். நல்லதே நடக்கும்.