தனுசு ராசிக்காரர்களின் திருமண யோகம்

258

குரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும்.

தனுசு ராசிகுரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். இதனால் குரு பகவானின் ஆட்சி வீடாக தனுசு ராசி மாறி இருக்கிறது. குருவுக்கு சொந்த வீடே தனுசுதான். ஜென்ம இடத்துக்கு வந்து இருப்பதால் பழைய விரயங்கள் இனி இருக்காது. அப்படி இருந்தாலும் அவை அனைத்தும் சுப நிகழ்ச்சிக்கான சுப விரயங்களாகவே இருக்கும்.

தசாபுத்தி பலம் பெறும்போது சுப நிகழ்ச்சிகள் தானாகவே கை கூடி வரும். ஆனால் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்தால் தான் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களை பெற முடியும். குரு பகவான் மகர ராசியில் வக்கிரம் அடையும்போது மட்டும் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால் குருபகவான் சொந்த வீட்டில் இருப்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடலாம்.

குருபகவானுக்குரிய ஆலயங்களை தேர்வுசெய்து வழிபட்டால் நல்லது. குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும். வியாழக்கிழமை களில் சிவாலயங்களில் உள்ள குருவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் திருமண நிகழ்ச்சிகள் கைகூடி வரும். தனுசு ராசியில் ஏற்கனவே சனிபகவானும், கேதுவும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு சுபகாரியங்கள் நடப்பதற்கு வழிவகுக்கும். குருவின் பார்வை 7-ம் இடத்தில் இருப்பதால் இதுவரை தாமதமாகி வந்த திருமண பேச்சுவார்த்தைகள் சுபமான முடிவுக்கு வரும்.

9-ம் இடத்து குருபார்வை காரணமாக சுபகாரியங் களுக்கான பொருட்களை அதிகளவில் வாங்கும் யோகம் உள்ளது. இந்த யோகத்தை தடையின்றி பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும்.குறிப்பாக தேனி மாவட்டம் வேதபுரியில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு கொண்டைக்கடலை தானம் செய்தால் தடைகள் அனைத்தும் விலகி சென்றுவிடும். சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூவரையும் வழிபட்டால் கைமேல் பலன் உண்டு.

குலதெய்வ வழிபாட்டுடன் பத்திரகாளியையும் வழிபட்டால் நல்லது. பத்திரகாளியை வழிபட இயலாதவர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்துக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் திருமணமாலை தேடிவரும். குருபெயர்ச்சி அடிப்படையில் திங்கட்கிழமைகளிலும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை குருபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் இருப்பார். இந்த காலகட்டத்தில் மட்டும் திருமண பேச்சுவார்த்தைகளில் சற்று கவனம் தேவை. உத்திராடம் நட்சத்திரத்துக்கு குருபகவான் வரும்போது (மார்ச் மாதம்) திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும். அந்த காலகட்டத்தில் திருமண பேச்சுவார்த்தைக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்புகளும் விலகும்.

பொதுவாக குரு ஜென்ம ராசியில் அமரும்போது குருபலம் வந்துவிடும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் சிலருக்கு சற்று அலைச்சலுக்கு பிறகே சுபநிகழ்ச்சிகளில் வெற்றி உண்டாகும். இந்த வெற்றியை எளிதில் பெற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். பெருமாள் கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சனிக்கிழமை சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

கும்பகோணத்தில் சக்கரபாணி ஆலயத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் உங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். 5-ம் இடத்து குருபார்வை இதற்கு உதவியாக இருக்கும். சக்கரத்தாழ்வார் வழிபாடும் 5-ம் இடத்து குருபார்வையும் ஒன்றுசேரும்போது திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேதீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

2020-ம் ஆண்டு மார்ச் முதல் ஜூலைக்குள் குடும்பத்தில் பொருளாதாரம் மேம்படும். அது சுபசெலவுகளாக மாற வாய்ப்புள்ளது. அந்த சுபச்செலவு வாய்ப்பை பெற உத்திரமேரூர் அருகில் உள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் குருபகவானை வழிபட்டால் வெற்றி உண்டாகும். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் (1-ம் பாதம்) ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. மூலம் நட்சத்திரக்காரர்கள் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடலாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநெல்வேலி காந்திமதி அம்மனை வழிபட வேண்டும். என்றாலும் சனிக்கிழமை களில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சியில் திருமணம் உடனே கைகூடும். எனவே சக்கரத்தாழ்வார் பற்றி தனுசு ராசிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார்.

அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர். சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசித்தால் நல்லது.

சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும். நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு.

அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிரக தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். ‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.

சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.

எனவே இந்த குரு பெய்ர்ச்சியில் தனுசு ராசிக்காரர்கள் அவசியம் சக்கரத்தாழ்வார் வழிபாட்டை செய்ய வேண்டும். சக்கரத்தாழ்வாருக்குரிய போற்றிகள் வீட்டில் இருந்து சொல்வதை விட வைணவ ஆலயங்களில் உள்ள அந்த சன்னதிகளில் அமர்ந்து சொல்வது சிறப்பானது. சக்கரத்தாழ்வாரிடம் சரண் அடைந்து வழிபட்டு பாருங்கள் உங்கள் குறைகள் எல்லாம் தவிடுபொடியாவதை அனுபவப்பூர்வமாக காண்பீர்கள்.