தம்பதியர் கருத்துவேறுபாடு நீக்கும் மருத மர வழிபாடு

245

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர்.

ராஜகோபுரம், பாலசுப்பிரமணிய சுவாமிதேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்..

இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் – மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கின்றனர்.

மேலும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் முருகப் பெருமான் என்று மூன்று சன்னிதிகளுக்கும் தனித்தனியாக மூன்று கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு வந்து மூவரையும் வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கிறார்கள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.