திருமணம், புத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

31

திருமணம், புத்திர தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. தலையாட்டும் விதமாக இடது பக்கம் தலைசாய்த்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஒரு காலத்தில் வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என்று பல நதிகள் இருந்தன. இதனால், அப்போது ஆற்றூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில், ஆத்தூர் என்று பெயராகியுள்ளது.

எந்தவொரு செயலையும், தொழிலையும் தொடங்குவதற்கு முன்னதாக தலையாட்டி விநாயகரை வணங்கி வழிபட்டு அந்த செயலையும், தொழிலையும் செய்தால், அது முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

சிவதல யாத்திரைக்கு சென்றவர் வசிஷ்ட முனிவர். அப்போது வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் அமர்ந்து தவம் புரிந்தார். அந்த இடங்களிலெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கி சிவனின் அருள் பெற்றார். இதே போன்று இந்த தலத்திலும் தவம் செய்த போது திருவண்ணாமலை ஜோதி வடிவில் காட்சி தருவது போன்று தரிசனம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அதன்படியே, வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவமாகவே சிவபெருமான் காட்சி தந்தருளினார். காலப்போக்கில் இந்த லிங்கமானது மண்ணில் புதைந்தது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்தப் பகுதியை கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னன், எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னதாக சிவனை வழிபட்ட பிறகே செய்வார். தனது மீது தீவிர பக்தி கொண்ட மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான், இந்த தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

சிவனின் கூற்றுப்படியே அந்த இடத்தில் தோண்டிய போது, மண்ணில் லிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட து. அதற்கு அருகாமையில் புதையலையும் மன்னர் கண்டெடுத்தார். மேலும், அந்த புதையல் பணத்தை வைத்தே கோயிலும் கட்டி முடித்தார். கோயிலை கட்டுவதற்கு முன்னதாக சிவனிடம் உத்தரவு கேட்ட பிறகே வேலையை தொடங்கியுள்ளார் மன்னர்.

சிவபெருமானே கோயில் வேலைகளுக்கு பாதுகாவலராகவும் இருந்துள்ளார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு சிவபெருமானிடம் வந்து பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா? என்று கேட்டான். அதற்கு சிவன், நன்றாகே கட்டி முடித்திருக்கிறாய் என்று சொல்லும் விதமாக தனது தலையை இடது பக்கமாக ஆட்டினாராம். எனவே இவருக்கு தலையாட்டி பிள்ளையார் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கூட தனது தலையை இடது பக்கமாக சாய்த்தபடியே இருப்பதை காணலாம்.

திருமண தோஷம், புத்திர தோஷம், கிரக தோஷம் நீங்க, தலையாட்டி பிள்ளையாரை வேண்டிக் கொண்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோயிலுக்கு அருகாமையில், சிவன், காயநிர்மாலேசுவரராக அருள் பாலிக்கிறார்.