தீராத பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

88

தீராத பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

நம்மால் தீர்க்க முடியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவை தீர இறைவனுக்கு ஒரு அகல் தீபத்தை ஏற்றினால் மட்டும் போதும்.

தீபங்கள் நமது கர்ம வினையை நீக்குகின்றன. தெய்வங்களை அமைதிபடுத்தக்கூடியவை. தீபங்களை முறையாக ஏற்ற வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு விதமான வேண்டுதலுக்கும் தீபம் ஏற்றுவதற்கான ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கின்றன. இவ்வாறு எந்தெந்த தெய்வத்திற்கு எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட வழிகளும் இருக்கின்றன. அவ்வாறு முறையாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் உங்கள் மனக் கவலைகள், துன்பங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஆகவே எந்த தீபங்களை எப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்முடைய வீட்டில் தினம் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இந்த நேரத்தில் வீட்டில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.

ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் வீட்டில் ஏற்றுவதால் கிடைப்பது உண்டு. மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும். காரிய வெற்றிக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாம் நெய்யில் தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமையில் சகல ஐஸ்வரியங்களும் பெருக உப்பு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.அது போல ஜல தீபம் ஏற்றினால் குடும்பத்தில் இருக்கும் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் தணிந்து குளிர்ச்சியுறும் என்கிற நம்பிக்கை உண்டு. மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும். இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் தொல்லை நீங்க பைரவரை நினைத்து வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.

அதிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கையும் உண்டு. ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முக தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. பருத்திப் பஞ்சு வைத்து தீபம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வாழைத் தண்டின் நாரில் தீபம் ஏற்றினால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். தாமரைத்தண்டு நூலில் தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டையில் தீபம் ஏற்ற செல்வம் பெருகும். புதிய மஞ்சள் துணியில் தீபம் ஏற்ற நோய்கள் குணமாகும். புதிய சிவப்பு வண்ண துணியில் தீபம் ஏற்ற குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

புதிய வெள்ளைதுணி திரியில் தீபம் ஏற்ற அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி ஏற்படும். மேற்கு திசையில் விளக்கேற்றுவது கடன், தோஷம் நீங்கும். வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது அப்படி ஏற்றினால் மரண பயம் ஏற்படும்.