தொலைந்த பொருள் கிடைக்க அரைக்காசு அம்மன் பரிகாரம்!

177

தொலைந்த பொருள் கிடைக்க அரைக்காசு அம்மன் பரிகாரம்!

நீங்கள் தொலைத்த பொருளோ, உங்களது திருடு போன பொருளோ திரும்ப கிடைக்க அரைக்காசு அம்மனை நினைத்து பரிகாரம் செய்தால், அந்த பொருள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஞாபக மறந்து வந்து செல்லும். ஏதாவது ஒரு பொருளை கை தவறி எங்கேனும் வைத்துவிட்டு பல இடங்களில் தேடுவோம். அப்படியில்லை என்றால் நம்மை அறியாமலேயே சென்ற வழியில் விட்டு விட்டு வீட்டிற்கு வருவோம். அப்படியும் இல்லையென்றால், திருடர்கள் திருடிச் சென்று விடுவார்கள்.

நம்மை அறியாமல் தொலைத்த பொருளோ, அல்லது திருடர்கள் திருடிச் சென்ற பொருளோ திரும்ப கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக அம்மனை நினைத்து வழிபட்டால் அனைத்து வரமும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில் 107 அம்மன்களை வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழலாம்.

அரைக்காசு அம்மன் பெயர்க்காரணம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை வணங்கி வந்தனர். பிரகதாம்பாளை வணங்கி வரும் பக்தர்களுக்கு அரிசி, வெல்லம் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசில் அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால், பிரகதாம்பாளுக்கு அரைக்காசு அம்மன் என்று பெயர் வந்தது.

ஒருமுறை புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருளை திரும்ப பெற வேண்டி இந்த அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டார். மன்னர் தொலைத்த பொருள் கிடைத்துவிட்டது. அன்றுமுதல், தொலைந்து போன பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்க வேண்டி அரைக்காசு அம்மனை நினைத்து வழிபாடு செய்தால், தொலைந்து போன பொருள் திரும்ப கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

புதுக்கோட்டை சென்று வழிபட முடியாதவர்கள் சென்னை வண்டலூர் அருகாமையில் உள்ள ரத்னமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அரைக்காசு அம்மன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

17 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குபேரரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றுள்ளது. அன்றைய நாளில் மகாலட்சுமியின் டாலர் பதித்த தங்க ஜெயின் ஒன்று தொலைந்துவிட்டது. அப்போது, ரத்னமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரைக்காசு அம்மனை நினைத்து காணாமல் போன ஜெயின் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தனர்.

பிரார்த்தனை செய்த சிறிது நேரத்திலேயே தொலைந்து போன ஜெயின் குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்பட்டது.  ஜெயின் கண்டெடுக்கப்பட்ட அன்று சிலை வடிவமைக்கும் சிற்பியும் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலுக்கு வரவே, தெய்வ அருளாகவே எண்ணி அரைக்காசு அம்மனுக்கு சிலை வடிவமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

அம்மனுக்கு சிலை வடிவமைக்கும் பணி இரவு, பகலாக நடந்தது. அதன் பின் முற்றிலும் பணி முடிந்து தண்ணீர், தான்யம், பொன், பொருள் ஆகியவற்றில் வைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி அரைக்காசு அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்து அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகாரம்:

தொலைந்து போன பொருள் மட்டுமல்லாமல், திருடு போன பொருள், நகை, வாகனம், செல்போன் கிடைக்கவும், தங்களது சொத்து தங்களுக்கு வந்து சேரவும் அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டு வர வேண்டும். அப்படி வழிபட்டு வந்தால், அவர்களது பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். பொருள் திரும்ப கிடைத்த பிறகு வெல்லத்தை பிள்ளையாராக பிடித்து அம்மனாக நினைத்து பிரார்த்தனை செய்யலாம். அதன் பிறகு அந்த வெல்லத்தை பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.