தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

150

தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் என்ற ஊரில் உள்ள கோயில் வில்வவனேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் வில்வவனேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். வளைக்கைநாயகி, சர்வஜனரக்‌ஷகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா அமாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேஷம்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவ தல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறெங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி என்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்ப்புறமாக திரும்பி இருக்கிறது. நவக்கிரகங்கள் இத்தலத்தில் இல்லை. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மாவும் காணப்படாத நிலையில் துவார பாலகர்களாக நிற்கிறார்கள்.

இந்தக் கோயிலில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். கோயிலுக்குள் நுழைந்தால் நந்தி நம்மை நோக்கி திரும்பி கிழக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். உள்பிரகாரத்திற்குள் நுழைந்தால் வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

கோயில் வெளிப்பிரகாரத்தில் சப்தகன்னியர் சன்னதியும், சுந்தர மூர்த்தி விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப் பெருமான் சன்னதியும் உள்ளன. வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம்.

இத்தல இறைவனை வழிபட மனநிம்மதி கிடைக்கும். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்காகவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும், சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், அம்பாளுக்கு சேலை அணிவித்தும், பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா சிறப்பாக நடக்கும். இதற்கு அடுத்த நாள் அமாவாசை தினத்தன்று கோபுரத்தின் கீழ் வேடனை நிறுத்தி மூலஸ்தானத்தில் சிவனுக்கும் அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது.

பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தாவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில் தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.

இங்கு துவார பாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும் துவார பாலகர்கள் இடத்தில் இருக்கின்றனர். அருகில் கையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு இறைவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுக்குடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைகள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் விசேஷம். குறைகள் எதுவாக இருந்தாலும் கூறலாம். அப்படி கூறும் போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.

இங்கு நின்று வழிபட்டுக் கொண்டிருக்கும் போதே சுவாமி சன்னதியில் தீபாராதனை காட்டி முடித்துவிட்டு அம்பாள் சன்னதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்றும் கூறிவிடுவார். இவர் கூறியது போன்றே இத்தனை விஷயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. ஊழிக் காலத்தில் அனைத்து மழியக் கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும், அப்பெருமானின் ஆலோசனைப்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.

பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பாரோ அது போல சுவாமி, அம்பாள் சன்னதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்துக் கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோஷங்கள் விலகும். மற்ற இடங்களில் சப்த மாதாக்கள் தான் வழிபட்டதாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர்.

ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார். கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும். இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பு. சிவன் மற்றும் பார்வதி தேவி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில் தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.

ஆலய வரலாறு என்ன என்றால் ஒரு முறை கொள்ளிடம் ஆற்றுக் கரையில் இருந்த இடத்தில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் ஒரு மானைக் கண்டு அதைப் பிடிக்க அதைத்  துரத்தினான்.

ஆனால் அதுவோ மிகவும் வேகமாக ஓடி அருகில் இருந்த காட்டிற்குள் சிவபெருமானை வேண்டியவாறு  துதித்தவாறு தவத்தில் அமர்ந்து இருந்த முனிவரின் பின்னால் சென்று அவர் பர்ணசாலையில் ஒளிந்து கொண்டது. அதன் மீது அம்பை எய்ய எடுத்தவன் அந்த முனிவரின் பர்ணசாலையில்  அது பதுங்கிக் கொண்டதைக் கண்டு முனிவரிடம் சென்று அதை  கொண்டு எடுத்துச் செல்ல அனுமதி கேட்டான்.

அவர் அனுமதி இல்லாமல் அவர் வீட்டிற்குள் எப்படி நுழைவது? முனிவரோ அது பாவப்பட்ட பிராணி எனவும், தன்னிடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டதினால் அதை தன்னால் அவனுக்குத் தர இயலாது எனவும், ஆகவே அதை விடுத்து வேறு ஏதாவது மிருகத்தை வேட்டை ஆடிக் கொள்ளுமாறும் கூறிவிட்டு பர்ணசாளைக்குள் சென்று விட்டார்.

ஆனால் கோபமடைந்த வேடன் அவர் பேச்சை மீறிக் கொண்டு பர்ணசாலைக்குள் புக முயன்றபோது திடீர் என ஒரு புலி அந்த பர்ணசாலைக்குள் இருந்து வெளி வந்து அவன் மீது பாயத் தயார் ஆயிற்று. அதைக் கண்டு பயந்த வேடன் ஓடத் துவங்கினான். அதுவும் அவனை விடாமல் துரத்தியது.  ஓடிச் சென்ற  வேடன் அருகிலுள்ள சிறு ஆலயத்துக்குள் ஓடிச் சென்று அங்கிருந்த  ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அந்த காலங்களில் காடுகளில் நான்கு சுவர்களைக் கொண்ட ஆலயங்கள் இருந்தது இல்லை.

வெறும் களிமண்ணால் மேடு ஒன்றை எழுப்பி அதற்குள் வழிபடும் தெய்வங்கள் வைக்கப்பட்டு இருக்கும். புலியும் அதற்குள் புகுந்து கொண்டது. புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது.  உண்மையில் முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமானே புலி உருவில் வந்து இருந்தார்.

அன்று மகா சிவராத்திரி. இரவு வர, பயத்தினாலும், பசியினாலும் அவதியுற்ற வேடன் புலி அந்த இடத்தைவிட்டு எப்போது போகும் எனப் பார்த்தவாறு  தூங்காமல் மரத்தின் மீது கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அப்போது பதற்றத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான்.

அவன் உட்கார்ந்து இருந்த மரமோ ஒரு வில்வ மரம். இருட்டு வந்து விட புலி உருவில் இருந்த சிவபெருமானும் மறைந்து விட்டார். அது அவனுக்குத் தெரியாது. அவன் அமர்ந்து இருந்த மரத்தின்  கீழேதான்  சிவ லிங்கமும் இருந்தது. ஓடி வந்த வேகத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அவன் பிய்த்துப்  போட்டுக் கொண்டு இருந்த வில்வ இலைகளோ அந்த சிவலிங்கத்தை அர்ச்சனை செய்வது போல அதன் தலை மீது விழுந்து கொண்டு இருந்தது. விடியற்காலை ஆயிற்று.

அன்று அந்த வேடனின் வாழ்க்கையில்  இன்னொரு முக்கியமான நாள். அவன் வாழ்வு காலம் அன்றோடு முடிவடையா இருந்தது.  அவனை நோக்கி யமதூதர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். வந்தவர்கள் ஆலயத்துக்குள் புகுந்து கொள்ள முயன்றபோது அவர்களை நந்திதேவர் தடுக்கவில்லை. காரணம் யமன் சிவபெருமானை தரிசிக்கவே வந்துள்ளார்  என்ற நந்தி தேவர் எண்ணினார். ஆனால் அவர் தன் ஆலயத்தில் தன்னைக் கேட்காமல் புகுந்து மகா சிவராத்திரி அன்று தனக்கு வில்வ அர்ச்சனை செய்த வேடனை பிடித்துக் கொண்டு செல்வதா எனக் கோபமுற்ற சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி  உருவைக் கொண்டு யமதர்மராஜாரை துரத்தி அடித்து நந்தியைக் கடிந்து கொண்டார்.

தான் செய்த தவறை உணர்ந்த நந்தி தேவர் தன் மூச்சுக் காற்றை வீசி யமனை மேலே செல்ல விடாமல் தடுத்தார்.  மேலும், கீழும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த யமராஜார் அங்கிருந்தே சிவபெருமானை துதித்து அவரிடம் தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டார்.  அதனால் அவரை விட்டு விடுமாறு சிவனார் கூற நந்தி தேவர் தன் மூச்சுக் காற்றை தளர்த்திக் கொள்ள யமராஜர் அங்கிருந்து வேடனின் உயிரை பறித்துக் கொண்டு செல்ல முடியாமல் திரும்பிச்  செல்ல வேண்டியதாயிற்று.

ஆனால் நடந்த எதையும் அறியாமல், தான் தன்னை அறியாமலேயே செய்த புண்ணியக் காரியத்தினால் தனக்கு பிறவி நீண்டுவிட்டதையும்  உணராமல்  புலி சென்று விட்டது என்பதைக் கண்டு மரத்தில் இருந்து இறங்கி சிவனை வழிபட்டு விட்டுச் சென்றான்.

ஆலயத்தில் வாயிலை நோக்கியபடி அமர்ந்து உள்ள நந்திதேவர் யமதர்மராஜரோ தனது பக்தியை இறைவனுக்குக் எடுத்துக் காட்ட எண்ணி, ஆலயத்தின் அருகிலேயே ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச்  சென்றார்.

யமன் அமைத்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது.  அது முதல் அந்த ஆலயத்தில்  யார் உள்ளே நுழைகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் விதத்தில் இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி  அமர்ந்து கொள்ளாமல் வாசலைப் பார்த்தபடி அமர்ந்து உள்ளது இந்த ஆலயத்தின் விசேஷம்.

அரக்கனான சலந்திரன் என்பவனை  அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறி அவனை வதம் செய்த   மகாவிஷ்ணுவை  ஒரு பேடி எனக் கூறி சலந்தரனின் மனைவி சபித்தாள்.  ஆகவே ஒரு பெண்ணால் கிடைத்த சாபத்தை நீக்கிக் கொள்ளவே  தீரவே மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை துதித்து வணங்கி அவர் ஆலய முகப்பில் துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது இந்த ஆலயத்தின் தலபுராணம் என்று கூறுகிறார்கள் . இப்படி பிரும்மாவும், விஷ்ணுவும் துவாரகா பாலகர்களாக நிற்பது  வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.

மேலும் அக்னி தேவரும்  இங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து ஒரு தீர்த்தத்தை உருவாக்க  அதை அக்னி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

நான்கு வேதங்களும் கூட இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை துதித்தபடி வில்வ  மரங்களாக அமர்ந்து உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த நான்கு வில்வ மரங்களின் கிளைகளும் ஒன்றாகிப் பின்னிக் கொண்டு ஒரே மரம் போலக் காட்சி தருகிறது ஒரு அதிசயமான காட்சியாகும்.