தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

78

தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

திருச்சி மாவட்டம் தாத்தயங்கார் பேட்டை அருகிலுள்ள காருகுடி என்ற ஊரில் உள்ளது கைலாசநாதர் கோயில். இந்தக் கோயிலில் கைலாசநாதர் மூலவராக சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நவக்கிரகம், பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

எப்போதும் மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். எல்லோரிடமும் அன்பாகவும், நட்பாகவும் பழகுவார்கள். தைரியமும், நேர்மையும் இவர்களது இணக்கமான சுபாவம். தன்னைப் பற்றி உயர்வாக கருதும் இவர்கள், எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். நீர் சம்பந்தமான நோய்கள், நாள்பட்ட நோய்கள், கண் தொடர்பான நோய்கள் குணமாக கைலாசநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

தல பெருமை:

கிட்டத்தட்ட 1800 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இந்தக் கோயிலை புதுப்பித்து கட்டியுள்ளான். இந்தக் கோயிலில் பூஜைகள் தடையில்லாமல் நடப்பதற்கு 1266 ஆம் ஆண்டில் கர்நாடக மன்னன் போசல வீர ராமநாதன் நிலங்களை தானம் செய்துள்ளான். இதே போன்று 1541 மற்றும் 1619 ஆம் ஆண்டுகளில் ராமசக்கரவர்த்தி என்ற மன்னன் நில தானம் செய்துள்ளான்.

காசிக்கு அடுத்து காருகுடி என்று கூறுவார்கள். இத்தலத்தின் கீழ் அசோக சக்கரம் சுற்றுகிறது.

ரேவதி நட்சத்திர பலன்:

சந்திரன் மற்றும் 27 நட்சத்திரத்திற்குரிய தேவியர்கள் ஆகியோருக்கு சிவன் மற்றும் பார்வதி ஆகியோர் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இதையடுத்து, ரேவதி மட்டும் தினந்தோறும் இத்தலத்திற்கு வந்து பூஜை செய்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. ஆகையால், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ரேவதி என்று பெயர் கொண்டிருப்பவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது நட்சத்திர நாளிலோ இந்தக் கோயிலுக்கு வரும் எந்த பொருள் வாங்கினாலும் 27 எண்ணிக்கையில் வரும் படி வாங்கி வந்து உதாரணமாக 27 திருமாங்கல்ய கயிறு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள் என்று வாங்கி வந்து சிவன் மற்றும் அம்மனுக்கு வைத்து அதனை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட காரியங்கள் நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து அஸ்வினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும்.

தல வரலாறு:

சந்திர பகவான் கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள் இருவரும் சிவன் மற்றும் பார்வதியை தரிசிக்க ஆசை கொண்டனர். இதையறிந்த பார்வதி இத்தலத்தில் சிவபெருமானுடன் காட்சி கொடுத்தார். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் வந்தது. கார் என்ற 7 வகையான மேகங்கள் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரை அன்றும், ரேவதி நட்சத்திர நாளன்றும் வருண பகவானுக்கு ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்றும், விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இந்தக் கோயில் விவசாயிகளுக்கான கோயிலாக விளங்குகிறது.