தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

117

தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

இரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் கோடீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் கோடீஸ்வரர், கைலாசநாதர் மூலவர்களாக காட்சி தருகின்றனர். தாயார் பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்பு போடும் ஆகிய நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்தக் கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் வாகன்ங்களில் எழுந்தருளியுள்ள நவக்கிரகங்களை காணலாம். தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள அமுதக் கிணற்றில் நீராடி தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம். இங்குள்ள இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டுள்ளார். ஆமணக்கு கொட்டைச் செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டமையால் இந்த ஊர் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராகவும், கோடி முருகனாகவும், கோடி அம்மையாகவும், கோடி தம் திருவுருவாக காட்சி தந்தமையால், இறைவன் கோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மூலவர் மீது பாணம் முழுவதும் கொட்டை கொட்டையாக காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்குள்ள பந்தாடுநாயகி அம்பாளின் ஒரு கால் பந்தை எட்டி உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தனது காலால் எட்டி உதைத்து அருள் செய்பவள் என்ற நோக்கத்தில் அம்பாளின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் ஆர்வமிக்கவர்கள் வெற்றி பெற்று பதக்கம் பெற வேண்டுமென்பதாக இந்தக் கோயிலில் உள்ள பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறந்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மை கிடைப்பதாக நம்பிக்கை.

கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக பலரும் நம்பிகின்றனர். பாவம் செய்தவர்கள் கொட்டையூரில் கால் வைத்தால் அவர்கள் செய்த பாவம் பல கோடி அளவு பெருகிவிடும். இதே போன்று புண்ணியம் செய்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்தால் அவர்களது புண்ணியமும் பல கோடி அளவு பெருகிவிடும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக ஒரு காலத்தில் பாவம் செய்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வராமலே இருந்தார்கள். அப்போது பந்தாடு நாயகி தான் அவர்களது பாவங்களை எல்லாம் பந்தை எட்டி உதைப்பது போன்று உதைத்து அவர்களது பாவங்களை உதைத்து எறிந்தாள். இதனால், பாவம் செய்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்கின்றனர்.

சத்தியரசி என்ற மன்னன் திரிஹர்த்த தேசத்தை ஆண்டார். இவரது மகனான சுருசி சாபம் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனை கண்டாலே ஊர் மக்கள் அனைவரும் தெரித்து ஓடினர். தன்னைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுவதைக் கண்டு சிவபெருமானை வணங்கினான். சிவபெருமானோ, கொட்டையூர் சென்று வணங்கும்படி கூறினார். சுருசியும் கொட்டையூர் சென்று, அமுதக்கிணற்றில் நீராடினான். முன்பிருந்த தோற்றத்தை விட மிகவும் அழகான தோற்றத்தை பெற்றான். பல பெண்கள், இந்த அமுதக் கிணற்று நீரை தங்களது தலையில் தெளித்து அழகான வடிவத்தைப் பெறலாம் என்று கருதுகின்றனர்.