தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

142

தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ளது திருவானேஷ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக திருவானேஷ்வர் இருக்கிறார். மேலும், தாயார் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி காஞ்சி பெரியவர் தியானம் செய்துள்ளார். இந்தக் கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் படைப்பு சிற்பமாக உள்ளனர். மேலும், பிரகாரத்தைச் சுற்றிலும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம் மற்றும் நந்தி சன்னதிகள் உள்ளன.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் குணம்:

மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடல் வலிமை பெற்றவராக இருப்பீர்கள். எப்போதும் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கை நடத்தவே விரும்புவீர்கள். மனைவி மீது அன்பும், பாசமும் கொண்டிருப்பீர்கள். வயதில் பெரியவர்களை எப்போதும் மதிப்பீர்கள். தொழில் செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். அதில், அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். எல்லோரிடமும் சகஜமாக பழகுவீர்கள்.

தல பெருமை:

இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி காஞ்சி பெரியவர் தியானம் செய்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். அப்படியில்லை என்றால், தங்களது பூரட்டாதி நட்சத்திர நாளில் இந்த கோயிலுக்கு சென்று திருவானேஷ்வரரை வழிபட்டு வரலாம்.

சிறப்பு:

ஜாதகத்தில் 2ஆம் இடம் சந்திரனையும், 5ஆம் இடம் புதனையும் குறிக்கிறது. சந்திரன் மதிக்காரகர். புதன் பகவான் அறிவுக்காரகர். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மனம், கூர்மையான அறிவு பெற்று வாழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம். ஏழைகளுக்கு 7 வகையான வண்ண ஆடைகளை இந்தக் கோயிலுக்கு தானம் செய்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

பூரட்டாதி நட்சத்திர நாளில் தான் காலபைரவர் 7 கிழமைகளைப் படைத்தார். அதோடு, அந்த 7 கிழமைகளை யானைகளின் மீது ஏற்றி பவனியும் வந்தார். காலசக்கரத்தை படைத்தருளிய கோயில் தலம் இது என்று வரலாறு கூறுகிறது. தேவர்களுக்கு எல்லாம் தலைவனான இந்திரனும், ஐராவத யானையும் பூரட்டாதி நட்சத்திர நாளில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

கல்வியறிவு பெற ஏற்ற தலம் இது. மகாபாரதத்தில் நல் அறிவு கொண்டனாக பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் விளங்கினான். ஜோதிட அறிவு பெற்றவனான சகாதேவனை சந்திக்க, யுத்தம் துவங்குவதற்கு முன்னதாக துரியோதனன் வந்தான். அப்போது, எந்த நாளில் போர் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்று துரியோதன்ன், சகாதேவனிடம் கேட்டான். ஆனால், போர் புரிவதே சகாதேவனை எதிர்த்து தான்.

எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போர் புரிவதற்கு அமாவாசை நாள் தான் சரியான நாள் என்றும், அன்றைய நாளில் போரிட்டால் வெற்றி உனக்கு தான் என்று சொல்லி அனுப்பினான். ஆனால் கிருஷ்ணரோ, தனது மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து துரியோதனனை தோற்கடித்தார். இதன் மூலமாக எதிரியைக் கூட வெறுக்காத குணமும், எப்போதும் உண்மையாக நடந்து கொள்ளவும் சகாதேவன் போன்று ஞானம் பெறவும் இந்தக் கோயிலுக்கு வந்து திருவானேஷ்வரரை வழிபடலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க திருவானேஷ்வரரை வழிபாடு செய்கின்றனர். 7 ஸ்வரங்கள் உடன் இசையில் சிறந்து விளங்கவும் இத்தலத்து இறைவனை வழிபட்டு வர சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வரும் பக்தர்கள் திருவானேஷ்வரருக்கும், காமாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புதிதாக வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.