நரம்புத் தளர்ச்சி நீங்க புதன் வழிபாடு!

98

நரம்புத் தளர்ச்சி நீங்க புதன் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் (சுவேதாரண்யேசுவரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பொதுவாக புதன் பகவானை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத கிரகம் என்று தான் சொல்வார்கள். அதாவது, அலி கிரகம். ஆனால், இந்த திருவெண்காட்டில் உள்ள ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர்ர் கோயிலில் புதன் பகவான் ஆண் கிரகமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

தனி சன்னதி கொண்ட புதன் பகவான்:

கல்வி, அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறமை, ஜோதிடம், இசை, கணிதம், மருத்துவம், சிற்பம், மொழிகளில் புலமை, புலவர் ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர் புதன் பகவான். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் புதன் பகவானுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. இந்த சன்னதிக்கு நேர் எதிரில் புதன் பகவானின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் உள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் சரிவர அமையாவிட்டால் அறிவுக்குறைபாடு ஏற்படும். நரம்புத்தளர்ச்சி வரும். புத்திர பாக்கியமும் கிடைக்காமல் போய்விடும். இந்த குறைபாடுகள் கொண்டவர்கள் தங்களது தோஷ நிவர்த்திக்காக இந்த கோயிலுக்கு வந்து புதன் பகவானின் சன்னதிக்கு எதிரில் உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, புதன் பகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும், இசைக்கலைஞர்கள், திரைப்பட கலைஞர்களும் புதன் பகவானை வழிபட நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். காசிக்கு சமமான ஆறுதலங்களில் திருவெண்காடு தலமும் ஒன்று. காசியிலுள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெண்காட்டில் மூர்த்திகள் மூன்று (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), தீர்த்தங்கள் மூன்று (அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சந்திரன் தீர்த்தம்), தல விருட்சம் மூன்று (வடவால், வில்வம், கொன்றை) என்று மும்மூன்றாக அமையப்பெற்றுள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போன்று இந்த கோயிலில் ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர்ர் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், யுகம் பல கண்ட கோயில் என்ற பெருமை பெற்றுள்ளது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த கோயிலும் இது ஆகும்.

புதன் பகவான்:

அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்கு உட்பட்டவர் வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான். இவர், தாயின் அரவணைப்போடும், சேய் போன்றும் அன்னையர் கோயிலுக்கு இட து பக்கத்தில் தனது கோயிலை அமைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதன் பகவான் ஆணும் இல்லை, பெண் இல்லை. இவர் ஒரு அலி வடிவம் பெற்றிருந்தார். தனது தோஷம் நீங்க இந்த கோயிலில் உள்ள திருவெண்காடரை வழிபட்டு அவரது அருளால் ஆண் வடிவம் பெற்று நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர், செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் 5ஆவது காண்டத்திற்கு அதிபதியாக ஆனார். இதனால், புதன் பகவானுக்குரிய நவக்கிரக தலங்களில் திருவெண்காடு சிறப்பு பெற்றது.

அகோர பூஜை:

புத பகவானுக்கு தனி சன்னதி கொண்டுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தியான சிவபெருமானுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அனைத்து விதமான துன்பங்களையும் அழிக்க கூடிய சக்தி இந்த அகோர பூஜைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.