நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

92

நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மேலும், தாயார் பாகம்பிரியாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

திருச்செங்கோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் சிவன் மற்றும் சக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் உள்ளன. சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. கிட்டத்தட்ட 1901 அடி உயரம் கொண்ட இந்தக் கோயிலில் மலையில் ஏறுவதற்கு 1200 படிகள் உள்ளன.

நாகதோஷம் உள்ளவர்கள், ராகு தோஷம் உள்ளவர்கள், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கணவன் – மனைவி ஒற்றுமைக்காகவும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

திருச்செங்கோடு என்பதற்கு செந்நிற மலை என்றும் செங்குத்தான மலை என்றும் பொருள். ஆதலால், இந்த மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது. இந்த மலை உருவானதற்கும் புராணக் கதை உண்டு. அது என்னவென்றால், ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியின் போது ஆதிசேஷன் தனது பலத்தால் மேரு மலையை அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். வாயு பகவான் தனது பலத்தால் அந்த மேரு மலையை விடுவிக்க வேண்டும்.

இதையடுத்து, வாயு பகவான் வேகமாக வீச, மேரு மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்று தான் இந்த திருச்செங்கோடு மலை. ஆதிசேஷ பாம்பானது மலையை பிடித்த போது ஏற்பட்ட காயத்தால் ரத்தம் சிந்தியதால் மலை செந்நிறமானதால் இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த மலைக்கு நாககிரி, வாயுமலை ஆகிய பெயர்கள் உண்டு.

பொதுவாக சிவன் கோயிலில் என்றாலே சிவலிங்கம் இருக்கும். ஆனால், இங்கு மலையே லிங்கமாக கருதப்படுவதால் மலைக்கு எதிரில் பெரிதாக நந்தி இருக்கிறது. இந்த மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.

இந்த மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் வைகுண்டத்தையும், கயிலாயத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாட்கள் இந்தக் கோயிலில் கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் 60 அடி நீளம் கொண்ட 5 தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டிற்கு அருகிலுள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு தோஷம் உள்ளவர்கள், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நாகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள 60 படிக்கட்டுகளை சத்தியப் படிக்கட்டுகள் என்று கூறுவார்கள். பல வழக்குகள் இந்தப் படியில் தீர்க்கப்படுகிறது.

சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருங்கி முனிவர் கயிலாயம் சென்று சிவபெருமானை மட்டும் வழிபட்டு வந்தார். அப்போது பார்வதி தேவியும் உடனிருந்தாள். ஆனால், பார்வதி தேவியை பிருங்கி முனிவர் வழிபடவில்லை. மேலும், சிவனும், சக்தியும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் பார்வதி தேவி சிவனுக்கு அருகில் அமர்ந்தாள். அப்போது பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து தரிசனம் செய்தார். இதனால், கோபமடைந்த பார்வதி தேவி, முனிவரே, சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து காணப்படுவாய் என்று சாபமிட்டாள்.

இதையடுத்து, சிவபெருமான், சிவன் இல்லையென்றால் சக்தி இல்லை, சக்தி இல்லையென்றால் சிவனில்லை என்பதை விளக்கும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடது பக்கத்தில் இடம் கொடுத்தார். மேலும், மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கு இடப்பக்கத்தில் இடம் கொடுத்ததாக சிவபெருமான் குறிப்பிட்டார். இருவரும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் காணப்பட்டனர். அர்த்தநாரீ என்றால் இணைந்த வடிவம் என்று பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கு வந்து சில தலங்களில் காணப்பட்டார். அதில் ஒன்று தான் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்.